Thursday, 4 September 2014

இந்தி சேவைக்கான பாரத குடியரசுத் தலைவரின் தேசிய விருது

இந்திய  அரசின் கீழ் இயங்கும் மத்திய இந்தி நிறுவனம் ஆண்டு தோறும் தேசிய வளர்ச்சிக்காக  வெவ்வேறு துறைகளில் சிறந்த முறையில் சாதனை புரிந்து வரும்  இந்தி மொழி அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. குடியரசுத் தலைவரின் மாளிகையில் நடைபெற்று வரும் இவ்விழாவில் குடியரசுத் தலைவரே இந்த விருதினை வழங்கி சிறப்பிக்கிறார். இந்த விருதுடன் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுப் பட்டயமும் வழங்கப் படுகின்றன.


 உலகம் முழுவதுமிருந்து 22 பேர்கள் குடியரசுத் தலைவர் விருதிற்காக தேர்வு செய்யப் பட்டு இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 27 ம் தேதி நடந்த விழாவில் சிறப்பிக்கப் பட்டனர்.  மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி விருது பெற்ற அறிஞர்களோடு உரையாடி வாழ்த்து தெரிவித்தார்.



முனைவர் ஹரி. பால சுப்ரமணியம் அவர்களுக்கு பாரதக் குடியரசுத் தலைவர் மேன்மை மிகு பிரணாப் முகர்ஜி அவர்கள் இந்த விருதினை வழங்கி கௌரவித்தார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவின்   ஒளிப்பதிவினை 
http://www.presidentofindia.nic.in/ என்ற இணைப்பில் காணலாம்

Monday, 25 August 2014

மொழியாக்கமா மீட்டுருவாக்கமா?
                                முனைவர் எச். பாலசுப்பிரமணியம்


மொழியாக்கம் குறித்த சிந்தனையும் கருத்தாக்கமும்  பதினாறாம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் மேலைநாடுகளில் தொடங்குகிறது. ஏறத்தாழ இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பியர் இந்தக் கலையின் நுணுக்கங்களை ஒரு சூத்திரத்தில் பட்டியலிடுகிறார்.

தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து அதர்ப்படயாத்தல் (தொல். மரபியல் 1580 ௦)

 இப்போது  வானொலியின் தமிழ்ச் செய்தித் துறை ஆரம்பித்து 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி இந்தக் கருத்தரங்கு நடைபெறுகிறது.  வானொலியிலும பத்திரிகை போன்ற பிற ஊடகங்களிலும்   ஒரு செய்தி, நிகழ்ச்சி, பிரச்சினை, விவாதம் அல்லது எந்த ஒரு விஷயத்தையும் கேட்போர் அல்லது வாசகர்களுக்குப் பகிர்ந்தளிக்க நாம் இன்று பின்பற்றும் அதே செயல்முறையைத் தான் தொல்காப்பியம் நுட்பமாகக் குறிப்பிடுகிறது.  சமூகம், அரசியல் தொடர்பான ஒரு முக்கியமான பிரச்சினை பற்றி வெவ்வேறு நகரங்களிலிருந்து நிருபர்கள் தரும் மக்கள் கருத்துக்களை தொகுத்தல் - அது சம்பந்தமான முந்தைய உதாரணங்களைச் சேர்த்து விரித்தல், - இவ்வாறு தொகுத்து விரித்ததை ஒழுங்குபடுத்தல் - பிறகு கேட்போர் வாசகர்களுக்குப் புரியும் விதத்தில் அதர்ப்பட யாத்தல் --தொல்காப்பியர் வடிவமைத்த அதே செயல்முறையைத் தான் இப்போதும் பின்பற்றுகிறோம்.  இன்றைய மொழித்தளத்தில் இதனை மீட்டுருவாக்கம் என்கிறோம்.

மேலைச் சிந்தனையின்படி  மொழியாக்கம் மூவகைப்படும் – மெடாப்ரேஸ்  அதாவது சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தல், பாரப்ரேஸ் அதாவது கருத்தை உள்வாங்கிக்கொண்டு வேறு சொற்ளில் கூறுதல், மூன்றாவது  இமிடேஷன் அதைத் தழுவி சொந்தமாக படைப்பை உருவாக்கல்  படைப்பிலக்கியங்களை மொழிமாற்றம் செய்கையில் பாரப்ரேஸ் என்ற இரண்டாவது படியை இன்னும் சற்று   செம்மைப் படுத்தினால் அது மீட்டுருவாக்கம் ஆகிறது. 

ஒரு வாக்கியம அல்லது  சிற்றுரையின் மையத்தை விட்டு விலகாமல், இலக்கு மொழி வாசகர்களுக்குப் பரிச்சயமான வட்டங்களில் இயங்குகின்ற, அதற்கு இணையா சொற்கள் மற்றும்  உதாரணங்களுடன் விளக்குவது மீட்டுருவாக்கமாகும். 

சொல்லுக்குச் சொல் பெயர்த்து எழுதுவது இயந்திரத்தனமானது. அறிவு சார்ந்த விஷயங்கள், தகவல்கள்,  அலுவலக நடைமுறைக்கடிதங்கள் இவற்றை மொழிபெயர்க்க இயந்திரங்களைப் பயன்படுத்தலாம்.  ஏனெனில் இலக்கு மொழியிலும் அச்சொற்களுக்கு குறிப்பிட்ட ஒரு பொருள் தான் வழங்குகிறது. ஆனால், படைப்பிலக்கிய மொழியாக்கத்தில் பல பொருள்களிலிருந்து மிகவும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும்.  படைப்பிலக்கிய  மொழியாக்கம்  என்பது ஐரோப்பாவின் ஏதேனும் பன்னாட்டு விமான நிலையத்தில் ஒரு அறிவிப்பு, செய்தி, படிவம் போன்றவற்றை ஒரு மொழியிலிருந்து வேறொரு மொழிக்கு ஒரு நொடியில் மாற்றம் செய்வது போல அத்தனை எளிமையானது அல்ல,  அறிவு சார்ந்த  படைப்புகள் கருத்தை முதன்மையாகக் கொண்டவை, மூளையிலிருந்து உதிப்பவை. மூலமொழியின் கருத்துக்களை இலக்கு மொழியில் எளிதாக மாற்றம் செய்து விடலாம்.  இலக்கியத்தில் மூளையுடன் அன்பு, இரக்கம், சோகம், கருணை போன்ற இதயக் கூறுகளும் செயலாக்கம் புரிகின்றன.  மொழிபெயர்ப்பாரிலும் இதே உணர்வுகள் இருந்தால் தான் அவர் மொழிமாற்றம் செய்யும்போது மூல ஆசிரியர் சஞ்சரித்த அதே பாவனை உலகை எட்டி அந்த உணர்வுகளை உரிய சொற்றொடர்களில் வடிக்க முடியும். மூல மொழியின் இலக்கியச்சூழலை, சமூகத்தை, சிந்தனை மற்றும் கருத்தாக்கங்களை, கலாச்சாரத்தை நன்கு அறிந்திருந்தால் தான் மொழியாக்கத்தில் அவை பிரதிபலிக்கும். இல்லாவிட்டால் அந்த மொழிபெயர்ப்பு சாரத்தை இழந்த சக்கையாகி விடும்.  ஒரு நல்ல மொழியாக்கம் இன்னொரு மொழியில் புதிதாக எழுதுவதற்கு இணையானது. 

கவிதையை கவி உள்ளம் படைத்த ஒருவர் தான மீட்டுருவாக்கம் செய்ய இயலும, அதுபோல இலக்கியப் படைப்பில் நாட்டம் கொண்ட,  கூருணர்வு படைத்த ஒருவரால்  தான் படைப்பிலக்கியத்தை மீட்டுருவாக்கம் செய்ய  இயலும். சொந்தமாக எதையும் படைக்கத் தெரியாத எழுத்தாளர்  தான் மொழியாக்கத்தில் இறங்குவார் என் கூற்றும் தவறானது.  ரவீந்திரநாத் தாகூர், இந்தியில் மைதிலீ சரண் குப்த் முதல் மலையாளத்தில் வள்ளத்தோள், தமிழில் பாரதியார், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை வரையிலும் மூத்த படைப்பாளிகள் நல்ல மொழிபெயர்ப்பார்களாகத் திகழ்ந்துள்ளனர்.

கவிதை என்பது உணர்ச்சியும் ஆற்றலும் மிக்க சிறந்த இலக்கியப் படைப்பு.  உள்ளுணர்வின்  செறிவு, குறியீடுகளின் மிகை காரணமா கவிதை மொழியாக்கம் ஒரு சவாலாகவே இருந்து வருகின்றது மலையாளக்கவிஞர் சச்சிதானந்தன் கூறுவது போல ஒருவர் முண்டத்தின் மீது இன்னொருவர் தலையைப் பொருத்தும் விக்கிமாதித்தன் வேதாளக் கதை அங்கு நடக்கிறது. மொழிபெர்ப்பாளர் தன் உடல் மீது மூல ஆசிரியரின் தலையைச் சுமக்க வேண்டிய நிலை. பிறகு அவரது இதயப் பொய்கையில் முக்குளித்து சங்குகளையும் சிப்பிகளையும் எடுத்து ஒவ்வொன்றாக ஊதிப்பார்க்க வேண்டும்,  இந்திக் கவிஞர் நாகார்ஜுனின் ‘காளிதாஸ் என்ற  கவிதை நினைவிற்கு வருகிறது. காளிதாசரிடம் கவிஞர் கேட்கிறார் –
ராணி இந்துமதி இறந்தபோது ரகுகுல மன்னன் அஜன் அழுதானா? அல்லது நீயா?
ரகுவம்ச மகாகாவியத்தில் அஜ மகாராஜாவின் சோகத்தை காளிதாசர் வர்ணித்திருப்பதைப் பார்த்தால் ராணியின் விரகத்தில் அந்த மன்னனைக் காட்டிலும் காளிதாசர் அதிக சோகமடைந்ததாகத் தெரியும். அதுபோல பல நேரங்களில் மூல ஆசிரியரை விட மொழிபெயர்ப்பாளர் அதிக உணர்ச்சியை கொட்டி விடுகிறார்.   மொழியாக்கம் மூலத்தை விட ஏற்றம்  பெற்று விடுகிறது.  இருந்தும் நம் நாட்டில் மொழிபெயர்ப்பாளர் இரண்டாந்தரப் படைப்பாளியாகவே கருதப்படுகிறார்..

மொழிபெயர்ப்பு என்பது இன்னொரு மனத்திலும் இன்னொரு சமூகத்திலும் நுழையும் அனுபவம் என்கிற பாவண்ணன் மொழிபெயர்ப்பில் கிடைக்கும் ஆனந்தத்துக்காகவே மீண்டும் இந்த முயற்சியில் இறங்குகிறேன் என்கிறார்.     

பண்டைய இந்திய இலக்கிய கர்த்தாக்கள் ஐரோப்பியர் கூறும் மூன்றாவது உத்தியான இமிடேஷன் – அதாவது தழுவி சொந்தமாகப் படைப்பாக்கம் செய்வதில் - நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.  நமது புராணங்கள்-தொல்கதைகள் தங்கச்சுரங்கம் போன்றவை,   புலமை வாய்ந்த யாரும் இதிலிருந்து கதைக்கருவை எடுத்து, கவிதை, நாடகம், உரைநடை போன்ற எந்த வடிவிலும் படைக்க முடியும்.  அவ்வாறு படைக்கும்போது தமது கற்பனை வளத்தையும் வேண்டியபடி சேர்த்துக்கொள்வார்கள்.  அதோடு மட்டுமன்றி அவர்களின்  பிரதேசம், மக்கள், வாழ்க்கை,  இயற்கைச் சூழல் எல்லாமே அதில் இடம் பெறும்.  இத்தனை சுதந்திரமும் இருந்ததால் தான் கம்பனின் இராமாயணம் வால்மீகியிலிருந்து தனித்து நிற்கிறது.  அயோத்தி மாநகரின் வர்ணனையில் சோழ வளநாட்டின் இயற்கையழகு மிளிர்கிறது.  இதனால் தமிழர்கள் இராமகதை தங்கள் நாட்டிலேயே நடப்பதுபோல உணர்கிறார்கள்.  இதே உணர்வு தான் மலையாளிகளுக்கு துஞ்சத்து எழுத்தச்சனின் இராமாயண-மகாபாரதங்களைப் படிக்கும்போது ஏற்படுகிறது.  கம்பராமாயணம் தவிர, இந்தி, கன்னடம், தெலுங்கு, ஒரியா, அசாமிய  மொழிகளில் ராமாயண-பாரதங்கள் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் தோன்றியதும் அவை அனைத்தும் சுதந்திரப் படைப்புகளா விளங்குவதும்  குறிப்பிடத்தக்கது.  அதே போல  ஒரே தொல்கதை பல்வேறு மொழிகளில் வேவ்வேறு வடிவில் வழங்க காண்கிறோம்.  ஒரே கதை வேறு வேறு தை மாந்தர் பெயருடன்  கடல், மலை கடந்து பிற நாடுகளிலும் நடமாடுவதைப் பார்க்கிறோம்.   

மொழி என்பது கலாச்சாரத்தினின்று பிரிக்கமுடியாத ஒன்று என்கிறார் ராபர்ட் லாடோ.  அதாவது மொழியும்  பண்பாடும் ஒன்றோடொன்று பிணைந்து கிடக்கின்றன.  ஆகவே நாம் மொழியை மட்டும் பெயர்ப்பதில்லை.  மொழியுடன் அது சார்ந்த கலாச்சாரத்தையும் இலக்கு மொழிக்கு எடுத்துச் செல்கிறோம். இரண்டு பண்பாடுகளுக்கிடையே தொடர்பு ஏறபடுத்தும் சாதனமே மொழியாக்கம். ஒரு சமூகத்தின் அனுபவங்கள் தான் அதன் கலாச்சாரமாகப் பரிணமிக்கிறது.  ஒவ்வொரு மொழிச் சமூகத்துக்கும் தனதான எண்ணங்கள், கோட்பாடுகள், சமய நம்பிக்கைகள்-விலக்குகள், உணவு-உடை நடைமுறைகள்  இருக்கும். மூலமொழியில் வழங்கும் ஒரு பண்பாட்டுக்கூறு இக்குமொழியில் இல்லாத நிலையில் மொழிபெயர்ப்பாளர் வேவ்வேறு உத்திகளைப் பயன்படுத்தி அந்த இடைவெளியை நிரப்பவேண்டிய நிலையில் நிறகிறார்.

இந்த இக்கட்டான நிலையை அவர் எத்தனை திறமையுடன் சமாளிக்கிறார் என்பதில் தான் மொழியாக்கத்தின் வெற்றி அடங்கியுள்ளது,

ஒரு மொழியின் பண்பாட்டுச் சொற்கள் அந்த மொழிச் சமூகத்துடன் பிணைந்து கிடப்பதால் அவற்றின் சமச்சொற்களை இலக்குமொழியில் தேடுவது சிரமமான காரியம். பண்பாட்டுக் கூறினை உள்ளடக்கிய அந்தச் சொற்கள் மொழியாக்கத்துக்கு வசப்படாதவை. அடிக்குறிப்பு தந்து விளக்குவது எளிது, ஆனால் இது வாசிப்பின் ஓட்டத்தை தடைப்படுத்தகூடும்.. மூமொழிச் சொல்லை அப்படியே தந்து அதன் கருத்தை  உரிய  சொற்ளால் அங்கேயே விளக்கலாம். அல்லது அதே கருத்தை தொனிக்கச்செய்யும் புதிய  சொல்லை இலக்குமொழியில் உருவாக்கி விளக்கலாம்.  எதுவும் முடியாத நிலையில் அடிக்குறிப்பு தரலாம்.  எந்த நேரத்தில் எந்த உத்தியைப் பயன்படுத்த வேண்டும் என்பதை மொழிபெயர்ப்பாளர் தான் தீர்மானிக்க வேண்டும். 
  
இந்திய மொழிகளுக்கிடையே மொழி இடைவெளி தான் உண்டே தவிர, பண்பாட்டு இடைவெளி கிடையாது.  ஐயாயிரம் ஆண்டுகளாக இந்திய மக்கள் சமச்சடங்குகள், தத்துவம், ஜோதிடம், ஆயுர்வேதம், வணிகம், புனிதயாத்திரை என்ற பண்பாட்டுத்தங்களில் ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.  உடை-உணவுமுறைகளில்  தான் வேறுபாடு.  அந்த வேறுபாடும்  இப்போது மறைந்து வருகிறது. ‘செப்புமொழி பதினெட்டுடையாள் – எனில் சிந்தனை ஒன்றுடையாள் இது பாரதி வாக்கு. இதையே தான் மத்திய சாகித்திய அகாதெமியின் ஆரம்ப விழாவின்போது முன்னாள் குடியரசுத் தலைர் ராதாகிருஷ்ணனும் ‘இந்திய இலக்கியம் ஒன்றே, அது இருபத்திரண்டு மொழிகளில் எழுதப்படுகிறது என்றார். எனவே இந்திய மொழிகளை பஸ்பரம் மொழியாக்கம் செய்கையில் பண்பாட்டுச் சிக்கல் ஒரு சில இடங்களில் தான் நேர்கிறது.  அவற்றையும் எளிதாக விளக்கி விட   முடியும்.  இந்திய மொழிகளிலிருந்து ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற ஐரோப்பிய மொழிகளுக்கு எடுத்துச்செல்கையில் தான் இட்டு நிரப்ப இயலாத கலாச்சார இடைவெளி தடையா நிற்கிறது.

இதில் ஒரு சுவையான விஷயம்.  வேற்றுமையைப் புரிந்து கொள்ளும் வரையில் தான் இடைவெளி தெரிகிறது.  ஒவ்வொரு  சமூகமும்  இன்னொரு சமூகத்தைப் புரிந்துகொள்ளும் போது தான்  தமது பண்பாட்டின் குறை-நிறைகளை அறிய முடிகிறது.  இந்தப் புரிதல்  மொழியாக்கத்தினால் தான் சாத்தியமாகிறது.  ஆகவே, ஒரு படைப்பாளிக்கு ஓரிரு அண்டை அல்லது தொலைவு மொழி  இலக்கியத்தைப் படித்துப் புரிந்துகொள்ளும் அளவுக்கு பரிச்யம் இருநதால் தான் அவரது படைப்பில் செழுமையும் வீச்சும நிறைந்திருக்கும்.

முந்தையத் தமிழ்ப் படைப்பாளிகள் தமிழ் தவிர  சமஸ்கிருதம் அல்லது தெலுங்கு மொழி அறிந்திருந்தனர். சுதந்திரத்துக்கு முன்பு, ஏன் ஐம்பதுகளுக்குப் பிறகு கூட தமிழ் வாசகர்கள் எழுத்தாளர்கள் மொழியாக்கம் மூலமாக மராத்தி, இந்தி, வங்கமொழி படைப்புகளை அறிந்திருந்தார்கள்.  பிரேம்சந்த், வி.ஸா..காண்டேகர், சரத்சந்திரர்,  தமிழர்கள் வீட்டுக் கூங்களில் நடமாடினர். இதனால் பண்பாட்டு வேற்றுமை அகன்று நட்பும் நல்லுறவும் வளர ஏதுவாயிற்று

முன்னாள் பாரதப் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் பன்மொழி அறிஞர். விஸ்வநாத சத்யநாராயணாவின் ‘வேயி பட்குலு என்ற தெலுங்கு நாவலை ‘சஹஸ்ர பண் என்று இந்தியில் மொழிபெயர்த்த நரசிம்மராவ் மொழியாக்கம் பற்றி மூன்று கருத்துக்களை முன்வைக்கிறார்.

1. மொழியாக்கம் மூலத்துக்கு விசுவாசமா இருக்க வேண்டும்.  அதில் எதையும் சேர்க்கவோ அல்லது குறைக்கவோ கூடாது.2. 

 மூலத்தில் பயன்பட்டுள்ள மரபுச் சொற்கள் பழமொழிகளை இலக்குமொழியில் அவற்றுக்குச் சம்மா மரபுச் சொற்கள் பழமொழிகளால் மாற்றம் செய்யலாம்.

3.  மொழியாக்கத்தைப் படிக்கும்போது அது மூநூல் படிப்பது போன்ற  உணர்வு தர வேண்டும.

இதில் மீட்டுருவாக்கத்தைப் பொறுத்தவரை, நரசிம்மராவ் கூறும் முதல் கருத்து சரியாகாது.   மூலத்துக்கு உண்மையாக இருந்திருந்தால் பிட்ஜெரால்டின் உமர் கயாம் மொழியாக்கம் பிரலமாயிராது.  அதாவது உமர் கயாம் என்ற  பாரசீகக் கவிஞர்  உலகப்புகழ் பெற்றிருக்க மாட்டார்.  பிட்ஜெரால்ட் மூத்திலிருந்து பிறழ்ந்து சுதந்திரம் எடுத்துக் கொண்டதால் தான் அந்தப் படைப்பு வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது.  இதிலிருந்து மீட்டுருவாக்கம் செய்பவர்கள் வாசகர்களுக்கு அதாவது இலக்கு மொழிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. .  இதன் பொருள் பிட்ஜெரால்ட் போல அளவற்ற சுதந்திரம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதல்ல.  மொழியாக்கத்தின் நோக்கம் வாசகர்கள் படைப்பினை நன்கு ரசிக்கும்படி செய்வதாக இருக்க வேண்டும்.  இதனால் பயன் பெறுவது வாசகர்கள் மட்டுமல்ல, மூலப்படைப்பும் தான். இலக்கு மொழியில் நல்ல முறையில் அறிமுகமாகிறது.  

மொழியாக்கம் செய்கையில் வாசகரின் புரிதல் என்ற தேவையை முன்னிட்டு மூலத்தில் கூட்டல்-குறைத்தல் செய்வது கலைநயம் வாய்ந்த பணி, ஆனால் அதே சமயத்தில் மீட்டுருவாக்கம் செய்பவருக்கு தம்மைக்கட்டுப்படுத்திக் கொள்ளவும்  தெரிந்திருக்க வேண்டும் என்கிறார்  வில்லியம் கூபர்.  இந்தச் செயல்முறையினால் மொழியாக்கம் சில நேரங்களில் மூலத்தை விட அழகு வாய்ந்ததா ஆகி விடுகிறது என்றும் கூறுகிறார்.

ஒரு படைப்பை மறுவாசிப்பு செய்கையில் ஏற்படும் அனுபவங்களே போல் தனது மொழியாக்கத்தைத் தான் மறுவாசிப்புச் செய்யும் அனுபவமும் வித்தியாசமானதாக அமையும்.  முதலில் தென்படாத ஒரு மின்னடிப்பு, மினுக்கம் திடீரென உள்ளுக்குள் தாவும். முதலில் உணரப்படாத ஒரு இருள்வெளி, மறுமுயற்சியில் தட்டுப்படும் என்கிறார் பா. ஜெயப்பிரகாசம்.

ஒரு மொழிபெயர்ப்பை முடித்த பின்னர் வாய்விட்டுப் படித்துப் பார்த்தால் சில சொற்கள் நாக்கில் சிக்கும்; படிப்பதில் தடுமாற்த்தை ஏற்படுத்தும்.  மனசுக்குள் படித்தால் இது வெளிப்படாது. படிக்கும்போது தங்குதடையற்ற சொல்லோட்டம் அவசியம் என்கிறார் மொழிபெயர்ப்பாளர் பசுமைக்குமார்.

மூத்த மொழிபெயர்ப்பாளர் கா. ஸ்ரீ. ஸ்ரீ. மொழியாக்கம் பற்றி கூறுகிறார்....   மொழிபெயர்ப்பு என்பது ஒரு நுண்கலை. ஒரு பாடலில் பிசிறு தட்டினால் இசை சிறக்காது. நாட்டியத்தில் ஓர் உணர்ச்சிக்குப் பதிலாக வேறோர் உணர்ச்சியை அபிநயித்தால் நடனம் சிறக்காது.  அதுபோலவே மொழிபெயர்ப்பில் ஒவ்வொரு சொல்லும் அங்கங்கே அமைய வேண்டும். 

வட்டார மொழி இலக்கியங்களின் மொழியாக்கத்தில் ஓரளவு நல்ல அனுபவம் பெற்றிருக்கிறேன்.  முதன்முதலா மொழிபெயர்ப்புக்குக் கிடைத்த புத்தகமே இந்த ரகத்தைச் சார்ந்தது தான்.  கி. ராஜநாராயணனின் ‘கரிசல் காட்டுக் கடுதாசி. கரிசல் பூமி என்று அழைக்கப்படும் நெல்லை மாவட்டத்தின் வடபகுதி. மண்ணின் மைந்தர்கள் பேசும் மொழியில் அகராதியில் காணப்படாத சொற்கள் மிகுந்திருக்கும்.  என்னுடைய பூர்வீகம் தென் நெல்லைப் பகுதி என்பதால் ராஜநாராயணனின் மொழிநடையில் மீண்டும் மீண்டும் முக்குளித்துப் புரிந்து கொண்டு கரிசல் காட்டுக் கடுதாசியை ‘காலீ மாட்டீ கே அஞ்சல் சே என இந்தியில் கொணர்ந்தேன். 

அடுத்து மொழியாக்கம் செய்யக் கிடைத்த நூல் இநதியில் வட்டார இலக்கியத்துக்குப் பிள்ளையார் சுழி இட்ட  பணீஸ்வரநாத் ரேணுவின் சிறுகதைத் தொகுப்பு.  பீகாரின் வடகிழக்கு மூலை, வங்காள எல்லைப் பகுதி. ரேணு படைப்புகளில் அந்தப் பிரதேச வட்டார வழக்குகளுடன் மைதிலி, மக்ஹி, வங்காளிச் சொற்கள்  விரவி இருக்கும்.  தொடர்ந்து பல ஆண்டுகளாக நான் தில்லியில் வசித்து வருவதால் கிராமியச் சொற்களில் ஓரளவு பரிச்சயம் உண்டு. மைதிலி மற்றும் வங்கமொழி பேசும் தில்லி வாழ் நண்பர்களின் உதவியுடன் அந்த மொழிச் சொற்களைப் புரிந்து கொண்டேன்.  படைப்பை திரும்பத்த் திரும்ப வாசிக்கும்போது புரியா இடங்கள் மீட்டு வாசிப்பில் தெள்ளெனப் புரிந்து விடுகின்றன.  அந்தக் கதைகளை மொழிபெயர்க்கையில் ஏதோ தமிழ்நாட்டுச செய்திகளை வர்ணிக்கும் அனுபவம் தான் ஏற்பட்டது.  இந்தியா முழுவதிலும் கிராமப்புற மக்களின் வாழ்க்கை, அவர்கள் சந்திக்கும் இடர்ப்பாடுகள், கள்ளங்கபடமற்ற பேச்சு எல்லாம் ஒரே போன்றவை.

மூத்த படைப்பாளி  நீல. பத்மநாபனின் ‘தலைமுறைகள், ‘இலையுதிர் காலம் என்னும் இரண்டு நாவல்களை இந்தியில் மொழியாக்கம் செய்துள்ளேன்.  இவற்றுள் ‘தலைமுறைகள் வட்டாரவழக்கு நாவல் தான்.  இந்தியில் ப்ணீஸ்வர்நாத் போலவே தமிழில் நீல. பத்மநாபன் வட்டார வழக்கு இலக்கியத்திற்கு முன்னோடி.  இந்தப் புதினத்தில் குமரி மாவட்டச் செட்டி மக்களின் மொழி துல்லியமாகப் பயன்பட்டுள்ளது.  திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்த தமிழன் ஆனதால் இந்த மொழிபெயர்ப்பில் எனக்கு குறிப்பிடும்படியான் சிக்கல் எதுவும் நேரவில்லை.    

அடுத்தபடியா நேஷனல் புக் டிரஸ்ட் மொழிபெயர்க்கத் தந்த நாவல் தோப்பில் முகமது மீரானின் ‘துறைமுகம். சாகித்திய அகாதமிக்காக மீரானின் ‘சாய்வு நாற்காலியையும் இந்தியில் மொழியாக்கம் செய்தேன்.  குமரி மாவட்டத்தில் அரபிக் கடலோரம் தேங்காய்ப்பட்டணத்தை மையமாகக் கொண்ட கதை. முன்பு அந்த மாவட்டம் கேரளத்தின் தென் பகுதியாக இருந்தது. . தமிழுடன் தாராளமா மலையாமொழிக் கலப்பு இருக்கும்.  கதைமாந்தர் முஸ்லீம் மக்கள்  என்பதால்  அவர்களின் பழகு தமிழில் உருது, அராபிய, பாரசீகச் சொற்கள் விரவியிருக்கும்.  அந்த சமூகத்தின் பின்னணியிலும் இந்த மொழிநுணுக்கங்களிலும் பரிச்சயமற்ற ஒருவர் தோப்பிலாரின் படைப்புகளை மொழியாக்கம் செய்ய இயலாது.  நான் பிறந்து வளர்ந்தது திருவனந்தபுரம் என்பதால் மலையாளம் கலந்த  தமிழில் சிக்கல் இருக்கவில்லை.  இந்தியில் நல்ல தேர்ச்சியுடன் உருது மொழியில் ஓரளவு நல்ல பரிச்சயம் உள்ளதால் அவரது மொழிநடையில் தொண்ணுறு விழுக்காடு நன்கு புரிந்து விட்டது...  சமயம்-மரபு சார்ந்த ஒரு சில சொற்கள்தான் புரியாமல்  இருந்தன.  அவற்றைப் பட்டியலிட்டு மூல ஆசிரியரைச சநதித்து விளக்கம் பெற்றேன். 

சில வட்டாரமொழிச் சொற்கள்:

மைலாஞ்சி – மருதாணி;  இத்திப்போல- கொஞ்சம் போல; துசியா- சுத்தமா; ஒருபாடு- நிறைய; ஓர்மை- நினைவு;  புதனாச்சே- புதன் கிழமை;  கன்னிமின்னியா- முதன்முதலில்;  ஆங்கியம்- சைகை; சம்மந்த- ஆலோசனை- திருமணப்பேச்சு; நீகம்பு- காலரா; 

சமயம் சார்ந்த உருது, அராபியச் சொற்களின் சிதைவு -
அசர்- காலை; சபராளி-பயணி;  கத்தீப்-கல்யாணம் நடத்தி வைப்பவர்;  ஹாஜத்- விருப்பம்;  உப்பா-பாட்டனார்;  ஸபூர்-பொறுமை; இஸ்மூக்கள்- மந்திரச் சொற்கள்;; சிபத்து-குணநலன்கள்; வ்ஹ்தாப்பாடு- வாக்குறுதி; நஜீஸ்- அசுத்தம்;  ஸீன்த்தான- அழகான; சாலிஹான- நல்லவரான  தௌபா- மன்னிப்பு..

கடந்த ஐந்தாண்டு காலமாக டல் கடந்து உறையும் இலங்கைத் தமிழர்களின் படைப்புகளை இந்தியில் மொழி பெயர்த்து வருகிறேன். இது  ஒரு தனியான அனுபவம்.  உள்நாட்டுப் போர் காரணமாக தம் சுற்றமும் இனமும் அனுபவித்த சொல்லொணாத் துயரங்களை இந்தப் படைப்பாளிகள் கவிதையாகவும், சிறுகதை-புதினங்களாகவும் படைத்துள்ளனர்.  இலண்டனில் வாழும் இரா. உதயணன் இவர்களில் முன்னோடி.  டென்மார்க்கில் வாழும் ஜீவகுமாரன் தம்பதியர் அருமையான படைப்பாளிகள்.  பாரிசில் இளங்கோவன், இதே போல நார்வே, ஸ்வீடன், ஜெர்மனி, கானடா, ஸ்பெயின் என்று பல நாடுகளில் அதிகளாகச் சென்று அந்த நாடுகளின் குடியுரிமை பெற்ற இவர்களில் பலரையும் படைப்பாளிகளாக்கியது சூழ்நிலையே.  ஈழத்தமிழில் சங்ககாலத் தமிழின் சுவடைக் காணமுடிகிறது.  ஈழத்தமிழின் சில சொற்கள் இன்றும் மலையாளத்தில் வழங்குகின்றன.  இவர்களின் பேச்சு மொழியிலும் கலப்பில்லாத தூய தமிழ்  நடமிடுகிறது.  அதே நடை  எழுத்திலும் பிரதிபலிக்கிறது. 

உதயணனின் ‘பனி நிலவு, ‘நூலறுந்த பட்டங்கள் என்ற புதினங்கள், ஜீவகுமாரனின் குறுநாவல் ‘சங்கானைச் சண்டியன், கலாநிதி ஜீவகுமாரனின் கவிதைப்புதினமான  ‘இப்படிக்கு அன்புள்ள அம்மா. இளங்கோவனின் சிறுகதைகள் தவிர சிங்கள ஆசிரியர் உபாலி லீலாரத்னாவின் ‘விடை பெற்ற வசந்தம் நாலுடன் மலேசியத் தமிழர் சை. பீர் முகம்மதின் புதினம் ‘பெண் குதிரையையும் மொழியாக்கம் செய்யக் கிடைத்த அனுபவங்கள் மறக்க முடியாதவை.  யதார்த்தத்தை  கலை வடிவமாகச் சமைக்கும் இவர்களின் திறன் வியக்கத்தக்கது. 

குற்றாலம் நீர்வீழ்ச்சியில் தலையைக் கொடுக்கும்போது அது சற்றுப் பின்தள்ளும்.  பிறகு அதிலிருந்து தலையை எடுக்கத் தோன்றாது.   ஈழத் தமிழ்ச் சொற்களில் அப்படியொரு வசீகரம்
உதாரணமாக சில சோரல்  -
பின்னேரம்- மாலை நேரம்;  வெளிக்கிடுதல்- புறப்படுதல்;  பெடியன்கள்- சிறுவர்கள்; காணும்- போதும்; ஒழுங்கை- தெரு; லிகிதர்- கணக்கர்; ஓம்- ஆமாம்;  புகையிரதம்- ரயில் வண்டி; கதைத்தல்- பேசுதல்; அவதானித்தான்- கவனித்தான்; பேசினான்- திட்டினான்; வருத்தம்- நோய்; மோசம் போனார்- இறந்தார்.

இதுவரை படைப்பிலக்கியத்தை  மீட்டுருவாக்கம் செய்வது குறித்துப் பேசினோம். வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகளின் மொழியாக்கம் ஒரு செய்தியை, நிகழ்ச்சியை நேரில் பார்ப்பது போலச்  சித்தரித்தலாகும்.. வானொலியில் ஒலிநயம் மட்டுமே ஒலிபரப்பாரின் தொழில்நுட்ப உத்தி. கேட்போரின் செவி தெள்ளெனப் புரிந்து கொள்ளும் வகையில் சொல்லடுக்கு எளிமையாக அமையவேண்டும்.  அரசியல், அயல்நாட்டு உறவு, பொருளாதாரம் போன்ற துறைச் சொற்களை பொருள் மாறுபாடின்றி துல்லியமாக மொழியாக்கம் செய்தல் வேண்டும். அது சரி,  அரசியல்-ராதந்திரம்-பொருளாதாரம் போன்ற துறைகளில் நூலிழையில் பொருள் வேறுபாடு கொள்ளும் ஒரே போன்ற ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் கிடைக்கின்றனவா? இந்தப் பிரச்சினை குறித்து அனுவமிக்க மொழிபெயர்ப்பாளர் எஸ். நீலகண்டன் கூறுவது கவனிக்கத் தக்கது -     
 ‘தமிழில் இன்னமும்  சிறு மாறுதல்களைச் சுட்டும் சொற்கள் உருவாகவில்லை. Friends -  Allies என்ற சொற்களை எடுத்துக் கொள்வோம்.  வட அமேரிக்கா நமது ally, ஆனால் Friend   அல்ல.  இதை எவ்வாறு துல்லியமா, மாறுபாடு புலப்படுமாறு மொழிபெயர்ப்பில் கொண்டு வருவது?  இலக்கிய மொழிப் பெயர்ப்பில் இந்தப் பிரச்சினை இல்லை.  அங்கு உணர்வு தான் முக்கியம்.  உணர்வு பிடிபட்டுவிட்டால் போதும். அரசியல் இலக்கியம் அப்படி இல்லை.  ஆழமான, செறிவான செய்திகள் தமிழில் வருவதற்கு வார்த்தைத் தட்டுப்பாடு தடையாக உள்ளது.  அறிவியலில் ஐந்து ஆண்டுகளில் நூறாண்டு வளர்ச்சி ஏற்பட்டு விடுகிறது.  ஆனால் புழக்கத்தில் உள்ள சொற்களின் எண்ணிக்கை உயரவேயில்லை.

எனவே  பத்திரிகைத் துறை செய்திப் பரிமாற்றத்திற்குத் தேவையாசொற்களை முதலில் உருவாக்க வேண்டும், அடுத்ததாக,  பொது அகராதி தயாரிக்க வேண்டும்.  மூன்றாவதா அடிப்படை அரசியல், தத்துவம் என முறை சார் அகராதிகளை உருவாக்க வேண்டும்.


(வானொலியின் தமிழ்ச் செய்தித் துறை ஆரம்பித்து 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி நடைபெற்றக் கருத்தரங்கில் நான் வழங்கிய கட்டுரை)

  



   .        .