Thursday, 29 May 2014

தினமலர் இணைய தளத்தின் விருந்தினர் பக்கத்தில் என்னுடைய நேர்முகம்.....




தினமலர் இணைய தளத்தின் விருந்தினர் பக்கத்தில் வெளிவந்திருக்கும் என்னுடைய நேர்முகத்தை முழுவதும் படிக்க இந்த இணைப்பை சொடுக்குங்கள்....

http://www.dinamalar.com/news_detail.asp?id=986377 


Sunday, 18 May 2014

உங்க பிள்ளைங்களுக்கு தமிழ் எழுத - படிக்கத் தெரியுமா?
டாக்டர். ஹெச். பால சுப்ரமணியம்





நீங்க காலையிலே என்ன ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டீங்க ? என்பது போன்ற சாதரணமான கேள்வியல்ல இது. நாலா பக்கங்களிலிருந்தும்  வந்து நம்மைத் தாக்கும் கேள்வி . களத்துக்குக் களம் குரல் உரத்துக் கொண்டு வரும் கேள்வி.

இப்போதெல்லாம் தமிழ் ஆனா ஆவன்னா படிக்காமலேயே பி.. பாஸ்  பண்ணும் அற்புதம் நிகழ்ந்து வருகிறது. எல்லா மாநிலத்திலும் இதே கதை தான். மலையாளி, குஜராத்தி, வங்காளி  எந்தக் குழந்தையும் தமிழ் சிறார்கள் போல அவரவர் தாய்மொழிக்கு  ‘டிமிக்கிகொடுத்துவிட்டு போட்டி உலகில் முன்னேறி வருகிறார்கள். இளைஞர்களுக்கு  அவரவர் தாய்மொழியில் பேச வரும் - அதுவும் கொச்சையாக , முக்கியமான ஒரு செய்தியை , அருமையானதோர் குட்டிக்கதையை  மந்திரம் போன்ற பொன்மொழியை , ஒரு சிரிப்புத் துணுக்கைக்கூட தாய்மொழியில் படித்துப் புரிந்துகொள்ளத் தெரியாது.

சிறுவயதில் எந்த மொழியைக் கற்கிறோமோ  அந்தக் கலாச்சாரம் நம்மைப் பற்றிக் கொள்கிறது. மொழியும் பண்பாடும் ஒன்றோடொன்று இணைந்தவை. ஒரு சிறிய எடுத்துக்காட்டு. தில்லியில் பப்ளிக் ஸ்கூலில் படிக்கும் பத்துக் குழந்தைகளுக்குத் தமிழ் சொல்லிக்கொடுக்கிறேன்.

தமிழ் நெடுங்கணக்கில்ளுஎன்ற எழுத்தைவள்ளுவர்என்ற சொல்லுடன் பயிற்றுவித்தபோது மூன்றாவது வகுப்பு படிக்கும் மாணவன் கேட்டான் ஒரு கேள்வி.
வள்ளுவர் ... ? யார் அவர்?

இதைக்கேட்டு  நீங்கள் எப்படி உணர்கிறீர்களோ தெரியாது. நான் திடுக்கிடவில்லை. எந்த மொழி கற்கிறோமோ அந்த கலாச்சாரம் தானே பிடிபடும்.. பிடிக்கும். இந்தச்சிறுவன் ஆங்கிலம் போதாதென்று  பிரெஞ்சும்  படிக்கிறானாம். பிரான்சு நாட்டுக் குட்டிக்கதைகள் எல்லாம் அத்துபடி. தமிழுக்கு கதி  கம்பனும் திருவள்ளுவரும் தான் என்றார் பாரதியார் . அந்த  வள்ளுவர் யார் என்று குழந்தை கேட்டால்?

யோசித்துப் பார்த்தால்  நாம் தான் நம்முடைய கடமையைச் சரிவரச் செய்யவில்லை என்பது புரியும். போட்டிகள் நிறைந்த யுகத்தில் ஆங்கிலமோ பிரெஞ்சோ  கற்பியுங்கள் . கூடவே தாய்மொழியை  வீட்டில் பயிற்றுவிப்பது மிக மிக அவசியம். பெரியவர்களான பிறகு இந்தக்குழந்தைகள் போட்டியுகத்தில் இறங்கிவிடுவார்கள். பிறகு படிக்க நேரம் வாய்க்காது.

இளமையில் கல்என்ற  முதுமொழிக்கு ஏற்ப இப்போதே இதற்கான  ஏற்பாட்டினைச் செய்ய வேண்டும் . குழந்தைகளுக்கு டான்ஸ், பாட்டு, கராத்தே என்று பல்கலைகள் கற்பிக்க நினைக்கிறோம். தாய்மொழி அறிவு  அமுதமானது , காலா காலத்துக்கும் பயன்படுவது என்ற நினைப்பு மட்டும் வருவதில்லை.

தாயுடனும் தாய் மண்ணுடனும் மனிதனை இணைப்பது தாய்மொழி . மகாத்மா காந்தி இன்னும் ஒரு படி மேலே செல்கிறார். 1946 ஆகஸ்டு 25ம் தேதி ஹரிஜன் இதழில் எழுதுகிறார்.
"I must cling to my mother - tongue as to my mother's breast in spite of its shortcomings. It alone will give me the life- giving milk"

என் தாய்மொழிக்கு  என்ன குறைபாடுகள் இருந்தாலும் குழந்தை தன் தாயின் மார்பகத்தோடு ஒட்டிக்கொள்வது போல நான் தாய்மொழியை சிக்கெனப் பிடித்துக்கொள்ள வேண்டும். அது தான் உள்ளத்துக்கு ஊட்டமளிக்கும் அமுதம்.. என்கிறார்.

அளப்பரிய சக்தி வாய்ந்தது மொழி. நாம் உண்ணும் உணவு நம் உணர்வுகளை நிர்ணயிக்கிறது. அதுபோலவே நாம் பயன்படுத்தும் மொழி நம் ஆளுமையைத் தீர்மானிக்கிறது. படிக்கும் புத்தகம் நம் சிந்தையைப் பாதிப்பது போல பயன்படுத்தும் மொழி நிச்சயமாக அதன் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மொழி என்பது வெறும் சொற்கோவை அல்ல, காலம் காலமாக நம் முன்னோர்களின் சிந்தனையில் முகிழ்ந்த பண்பாடு . ஆகவே தான் ராபர்ட் லாடோ
மொழியும் கலாச்சாரமும் ஒன்றிலிருந்து மற்றொன்றைப்  பிரிக்க முடியாதபடி  இணைந்துள்ளனஎன்கிறார். மொழியை இழப்பது பண்பாட்டை இழப்பதற்கு ஒப்பாகும். ஆத்திசூடியிலிருந்து  ஆரம்பிக்கிறது நம் பண்பாடு.

அறம் செய விரும்பு . ஆறுவது சினம் .

காலாகாலத்துக்கும் செவியில் ரீங்காரம் செய்யும் உரமான மந்திரச்சொற்கள். அவ்வைப் பாட்டியின்  சொல்லமுதத்தையும் , மனிதனை முழுமையான மனிதனாக்கும் வள்ளுவரின் குறளமுதத்தையும்  கம்பனின் கவியமுதத்தையும்  பருகத் தெரியாத துர்பாக்கிய நிலையில் இளந்தலைமுறையை வைத்திருப்பதற்கு ஒருவேளை இன்றையக் கல்விமுறையும் போட்டிகள் மிகுந்த  வாழ்க்கை முறையுமே காரணங்களாகலாம்.. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்...
தாய்மொழியில் சற்றும் பிடிப்பின்றி  நம் குழந்தைகள் பல மொழிகள் கலைகளைக் கற்றாலும் வள்ளுவர் கூற்றுப்படி அவர்கள் பல கற்றும் கற்றிலாரே.. சபை நடுவே  நீட்டோலை  வாசியா நின்றான்  குறிப்பறிய மாட்டாதவன் நன்மரம் என்பார் அவ்வைப்பாட்டி.


இதிலிருந்து நாம் ஆங்கிலமோ, பிற மொழிகளோ கற்கக்கூடாது என்று கூற வரவில்லை. இளமையில்  சொந்த மொழியை நன்கு கற்று நம் பண்பாட்டின் அஸ்திவாரத்தை  உறுதி செய்த பிறகு எந்த மொழி கற்றாலும் -- பிற மொழி வாயிலாக எந்த அறிவைப் பெற்றாலும் -- அதனால் நம் மொழி, பண்பாடு , சிந்தனை, ஆளுமை ஆகிய எதுவும் பாதிக்கப்படாது. மாறாக புதுவரவு நம் மொழிக்கு மேலும்  வலு ஊட்டும்.

ஆங்கிலக்கல்வி இன்றேல் நம் அறிவியலில் பின்தங்கிவிடுவோம் என்று வாதிடுவதில் பொருளில்லை எனக்கூறும் காந்தியடிகள். ரஷ்யா , ஜப்பான், ஜெர்மனி, சீனா போன்ற நாடுகள் ஆங்கிலத்தின் உதவி இல்லாமலேயே  அறிவியல் வளர்ச்சி பெற்றுள்ளன என்று சுட்டுகிறார். அறிவியலில் அவை இங்கிலாந்துக்கும் அமரிக்காவுக்கும் சளைத்தவை அல்ல. அறிவியல் நுட்பங்களை ஆங்கிலத்திலிருந்து மட்டுமன்றி ஜெர்மானியம் ரஷ்யமொழி முதலியவற்றிலிருந்தும் மொழியாக்கம் மூலம் நம்மொழியில் பெறலாம் என்கிறார். இதைத்தான் பாரதியார்பிறநாட்டு நல்லறிஞர்  சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்.’ என்கிறார். காந்தியடிகள், தாகூர், பாரதியார் இந்த மும்மூர்த்திகளும் அனுபவரீதியாக ஒரே குரலில் கூறுவது இதுதான் - தாய்மொழியில் பயில்வது சிந்தையில் பதியும். தன்னம்பிக்கை அளிக்கும். அந்தந்தத் துறையில் மேலும் ஆய்வுக்கு வழிகோலும்.
சுதந்திரம் கிடைத்த போதே நன்கு சிந்தித்து  பயிற்றுமொழி தொடர்பான கொள்கையை உருவாக்கியிருக்க  வேண்டும்.
பன்னாட்டு உறவை  வலுப்படுத்தும் நோக்குடன் சோவியத் ரஷ்யாவில் அந்தக்காலத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளி மாணவர்களுக்கு  ஒவ்வொரு நாட்டின் மொழியைக் கற்பித்தனர். தமிழ் உட்பட பல மொழிகளில் ரஷ்ய இலக்கியத்தையும் அறிவியலையும் வெளியிட்டனர். நாமும் நமது இத்தனை பெரிய நாட்டில் பத்து அயல்மொழிகளையாவது பரவலாக கற்பித்தித்திருக்கலாம். அதனால் எட்டுத்திக்கும் செல்லாமலேயே கலைச்செல்வங்களை இங்கு பெற்றிருக்கலாம்.

நாம் இது வரையிலும் இளம் தலைமுறையினர் பற்றி கவலைப்படாமல் இருந்ததற்கு பிராயசித்தமாக ஒன்று மட்டும் செய்தால் போதும் . சமயம், தத்துவம், இலக்கியம், இலக்கணம், மருத்துவம், வானவியல் என்று பலதுறைகளிலும் இயங்கிய அரிய தமிழ்க் கருவூலத்தை வரும் தலைமுறைக்கு கைமாற்றம் செய்ய அவர்களுக்கு ஒரு கடவுச்சொல் அதாவது பாஸ்வேர்ட் மட்டும் தந்தால் போதுமானது. இந்தக் கடவுச்சொல் மூலம் அவர்கள் தஞ்சை சரஸ்வதி மகால், கன்னிமாரா நூல்நிலையம் தொடங்கி தில்லி தமிழ்ச்சங்கம் வரையிலும்  உள்ள தமிழ் பொக்கிஷத்தை அடைய இயலும். இதனை ஒரு மதச்சடங்கு  போல தரவேண்டும். அந்த கடவுச்சொல் பதினெட்டு மெய்களும் பன்னிரண்டு  உயிரும் கொண்டது.

முனிவர்களும் அரசர்களும்  கவிஞர்களும் சேர்த்து வைத்துள்ள புதையல் பற்றி குழந்தைகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதை அவர்களுக்கு உரிமையாக்குவது நம் கடமை. வீட்டில் இந்த அனுஷ்டானத்தை  செய்ய இயலாவிட்டால் அந்தந்த பேட்டையில் பத்திருபது  பிள்ளைகளை சேர்த்து வாரம் ஒன்று அல்லது இரண்டு வகுப்புகள் நடத்தினால் போதும்.

தமிழ்நாடு அரசு சார்ந்த  தமிழ்  இணையக்கல்விக்  கழகம் இணையம்  வழி அடிப்படை நிலையிலிருந்து  தமிழ் கற்பிக்கிறது. தமிழ் வழியும் ஆங்கிலவழியும் கற்கலாம். www.tamilvu.org என்று சொடுக்கினால் விவரங்கள் கிடைக்கும். ஆண்டில் இருமுறை  தேர்வுகளும் உண்டுபாடப்பகுதிகளை பதிவிறக்கம் செய்த பின் வீட்டிலோ அல்லது கூட்டாகவோ மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை இருமுறை வகுப்பு நடத்தலாம்தமிழ் கற்பிப்போம். வாருங்கள்.

டெல்லியில் மயூர் விஹார் தென்னிந்திய கழகம், சங்கடஹர கணபதி ஆலயம், குர்காம் தமிழ் சங்கம் ஆகிய மூன்று இடங்களில் தமிழ் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்த வருடம் மே பதினோராம் தேதி 35 மாணவர்கள் தமிழக அரசு சார்ந்த தமிழ் இணையக் கல்வி கழகத்தின் சான்றிதழ் நிலைத் தேர்வு எழுதி உள்ளனர். தமிழ் இணையக்கழகத்தின் இணைய முகவரி www.tamilvu.org