Saturday, 14 March 2015

இந்திய மொழி இலக்கியக் கட்டுரைகள் ஒரு அறிமுக உரை

பேராசிரியர் டாக்டர் ஹெச். பாலசுப்ரமணியம் அவர்கள் எழுதிய '' இந்திய மொழி இலக்கிய கட்டுரைகள் '' என்ற நூல் குறித்து டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற நூல் அறிமுக விழாவில்  பேராசிரியர் கோவிந்த ஸ்வாமி ராஜ கோபால் அவர்கள்  ஆற்றிய உரை...




இந்திய மொழி இலக்கியக் கட்டுரைகள்
§  இந்நூலின் ஆசிரியர் பேராசிரியர் பாலசுப்பிரமணியன். நாடறிந்த சிறந்த மொழிபெயர்ப்பாளர். மொழிபெயர்ப்புக்கு எனச் சாகித்ய அகாதெமியின் விருது பெற்றவர்.

§  திக்கெல்லாம் தமிழ் மணக்கும் திருநெல்வேலிச் சீமைக்காரர்; ஆழ்வார் குறிச்சிக்காரர்; ஆழ்ந்த இந்திப் புலமையும் தேர்ந்த தமிழ் அறிவும் நிறைந்தவர்.

§  இவர்எழுதியுள்ள “இந்திய மொழி இலக்கியக் கட்டுரைகள்”என்ற நூல் மொத்தம் 9 ஆய்வுக் கட்டுரைகள் கொண்டுள்ளது.

§  இது தற்செயலாக நடந்ததா? அல்லது தெரிவுசெய்யப்பட்டதன் விளைவா? தெரியவில்லை.
§  ரத்தினங்கள் ஒன்பது.
§  ரசங்கள் ஒன்பது.
§  கிரகங்கள் ஒன்பது.
§  தானியங்கள் ஒன்பது.
§  இந்நூலின் கட்டுரைகளும் ஒன்பது.
§  நூல் பார்க்கச் சிறிது.  ஆயின் இதில் பேசப்பட்டுள்ள விஷயங்களோ பெரியன.
§  மூர்த்தி சிறிது. கீர்த்தியோ பெரிது.
§  பேராசிரியர் பார்ப்பதற்கு ஒரு ‘வெண்பா’ இல்லை… இல்லை… ஒரு குறட்பா போல் தெரிகிறார். ஆனால், அவர்தம் எழுத்து நடையோ ஒரு ’கலிப்பா’; துடிப்பும் துள்ளலும் நிறைந்தது.

§  இந்திய ஒப்பிலக்கியம்(Comparative Indian Literature) என்ற வகையில் இந்நூலில் மலர்ந்திருக்கும் இவர்தம் கட்டுரை ஒவ்வொன்றும் ஆழங்கால்பட்ட ஆய்வின்/ உழைப்பின் விளைச்சல்.
§  ஹிந்தியிலும் தமிழிலும் புதைந்து கிடக்கும் நுண்ணிய தகவல்களை, சீரிய சிந்தனைகளை, மானுட நேயத்தை, விழுமியங்களைரத்தினச் சுருக்கமாய் தம் கட்டுரை ஒவ்வொன்றிலும் அலசியிருக்கிறார்; ஆழ்ந்துபேசியிருக்கிறார் பேராசிரியர்பாலசுப்பிரமணியன் அவர்கள்.

§  மைதிலி – மொழியும் இலக்கியமும், ‘யாத்ரி’ நாகார்ஜூன் என்னும் எழுத்துலகப் போராளி, மிதிலைக் குயில் வித்யாபதி என்னும் இவர்தம் மூன்று ஆய்வுக்கட்டுரைகள் தமிழுலகுக்குத் தெரியாத அரிய பல செய்திகளைப் பதிவு செய்துள்ளன.

§  ஆதிப் பிராகிருதமே சமஸ்கிருதம், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளின் தாய் எனக் கட்டியம் கூறுகிறது “இந்திய மொழிகளை இணைக்கும் பிராகிருத மூலம்” என்ற இவர்தம் ஆய்வுக்கட்டுரை.

§  “வரிவிதிப்பும் அர்த்த சாஸ்திரமும்” என்ற ஆய்வுக்கட்டுரை கௌடில்யரின் மதி நுட்பத்தைப் பெரிதும் சிலாகித்துப் பேசுகிறது. இதுவே அன்றி, வ.வே.சு. ஐயர் கண்ட  ஆய்வு முடிபின் அடிப்படையில், சாணக்கியரின் பெயர்களுள் ஒன்றான “திரமிளன்” என்பதைக் கொண்டு,“அவர் ஒரு தமிழனாக இருப்பதற்கான சாத்தியக்கூறு” இருப்பதாக இறுதியில் உறுதிபடக் கருத்துரைக்கிறது. 

§  சீதாபிராட்டியுடன் அனுமன் பேசிய மொழி இனிமை மிகு நம் ‘தமிழ்மொழியே’ என நிறுவுகிறது இவர்தம் ஓர் ஆய்வுக்கட்டுரை.

§  இங்க்லீஷ் மொழியின் ஆதிக்கத்தில் இருந்து, அவரவர் தாய்மொழியை விடுவிக்க இந்நாளில் நாம் போராடிக் கொண்டிருப்பது போலக் கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து மக்களும் ப்ரெஞ்ச் மொழியின் ஆதிக்கத்திலிருந்து இங்க்லீஷை மீட்டெடுக்கப் போராடினார்கள் என்பதை வரலாற்றுத் தகவல்களுடன் “இங்கிலாந்தில் தாய்மொழிக்கான போராட்டம்” என்னும் கட்டுரை சுருங்கச் சொல்லுகிறது. 

§  “இலக்கிய இஸங்கள்” குறித்த சுருக்க வரைவினை ஒரு கட்டுரையும், “மொழி-யாக்கம்” அதாவது “மொழிபெயர்ப்புக் கலை” குறித்த தகவல்களை ஒரு கட்டுரையும் மிகச் செறிவாக எடுத்துரைக்கின்றன.

§  மொத்தத்தில் “இந்திய மொழி இலக்கியக் கட்டுரைகள்” என்னும் இச்சீரிய ஆய்வுநூல் ‘ஒரு கருத்துச் சுரங்கம்’ என்று சொன்னால் அது மிகையாகாது.

§  பேராசிரியர் பாலசுப்பிரமணியன் அவர்கள் முந்தைய தலைமுறை எழுத்தாளர் போல் காட்சி தருகிறார். ஆயின் அவர்தம் ஆய்வுப்பார்வை, செம்மாந்த எழுத்து நடை என்பன நம் காலத்துத் தலைமுறை எழுத்தாளாராய் அவரை அடையாளம் காட்டுகின்றன. 

§  ‘யாத்ரி’ நாகார்ஜூன் அவர்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், உள்ளம் கவரும் விதத்தில் துடிப்புடனும் துள்ளல் சுழிப்புடனும் கீழ்வருமாறுபதிவுசெய்கிறார் பேராசிரியர்: “‘யாத்ரி’ உண்மையிலேயே பயணியாக இயங்கியவர்.  பஷீருக்கு எப்படி மலையாள மொழி சொன்னபடி கேட்டதோ, அதே போல மைதிலியும், இந்தியும் ‘யாத்ரி’க்கு வசப்பட்டிருந்தன. கவிஞராக மட்டுமன்றி, கதைசொல்லியாகவும், நிரந்தர யாத்ரியாகவும், தத்துவச் சிந்தனையாளராகவும், பன்மொழி வல்லுநராகவும் கற்றோரிடையே நடமாடும் பல்கலைக்கழகமாகவும், பாமர ஜனங்களுக்கு நல்லது பொல்லாததை எடுத்துச் சொல்லும் ‘பாபா’வாகவும், குழந்தைகள் மத்தியில் குழந்தையாகவும் வளைய வந்த இந்த ‘யாத்ரி’ வாழ்விலே எதிர்நீச்சல் போட்டு நிமிர்ந்தவர்.  மலை போல வரும் விதியின் எந்த எதிர்ப்பையும் அட்டகாசச் சிரிப்புடன் அநாயாசமாக ஏற்று சவாலுக்கே சவாலாக விளங்கியவர்.  தத்துவ தரிசனங்களில் கரைகண்ட இந்தப் பூரண ஞானி, மரபுகளையும் அர்த்தமற்ற வழக்கங்களையும் முறியடித்து நவீன யுகத்தின் முனிவராக விளங்கினார்” (பக். 1-2).

§  இது போல வாசகரைக் கவர்ந்திழுக்கும் காந்தச் சொற்றொடர் நடை பேராசிரியர் பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு இயல்பாகவே ‘கை வந்த கலை’யாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.  அவர்தம் எழுத்து மிகவும் வசீகரம் மிக்கது; ஒரு முறை அல்ல பல முறை வாசிக்கத் தகுந்தது.