அமைதியை நோக்கி ஒரு சாத்வீகப் பயணம்
மெய்ப்பொருளின் ஆழத்தை விஞ்ஞான நோக்கில் ஆய்ந்து அதைப் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் அளவுக்கு தெளிவாகவும் எளிமையாகவும் எடுத்துக் கூறியவர் ஞானகுரு யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்கள். `நான் யார் ?` என்ற புதிரான வினாவுக்கு விடைகாணும் மார்க்கத்தைத் தெள்ளத் தெளிவாக போதித்து, மனிதன் தன்னை அறிந்து இறைநிலையில் ஒன்றிட வழிகாட்டிய கலங்கரை விளக்கம் வேதாத்திரி மகரிஷி, இத்தகைய பேரருளாளரை குருநாதராகப் பெற்ற அருள்நிதி மனோரமா. சின்னசாமி குருநாதரின் அருள் மழையில் நனைந்து, அந்தப் பரவசத்தில் நெகிழ்ந்து, தமது அனுபவங்களை அழகு தமிழில் பதித்துள்ள நூல் ”என் குருநாதர்“. சிற்பி கூறுவது போல “அலை பாய்ந்து கொண்டிருந்த ஓர் உள்ளம் எப்படி அமைதியின் பரிபூரணத்தில் அடைக்கலமாயிற்று என்பதைத் தெள்ளு தமிழில் கொள்ளை வனப்போடு கூறுகிறது இந்நூல்.
ஆணவம் என்ற தருக்குச் சிகரத்திலிருந்து சரணாகதி என்ற ஆன்ம பக்குவத்திற்குத் தன் வாழ்க்கை சென்ற யாத்திரையை இந்த இல்லத்தரசி சொல்லும் அழகு உள்ளம் கவர்கிறது.. ஒவ்வொரு படியாக அன்பு, ஆட்கொள்ளல், உபதேசம், சாதனை, அறிவு, தெளிவு, சரணாகதி என்ற நிலைகளை சகோதரி மனோரமா சின்னசாமி மலர்தொடுக்கும் லாகவத்தோடு மாலையாக்கித் தந்திருக்கிறார்.
ஞானக் கருவூலத்தின் திறவுக்கோல் போல விளங்கும் இச்சிறிய நூலை இந்திக்கும் தமிழுக்கும் பாலமாகத் திகழும் முனைவர். எச். பாலசுப்பிரமணியம் இந்தியில் நேர்த்தியாக மொழியாக்கம் செய்துள்ளார். “மேரே குருநாத்~ என்ற இந்த இந்தி மொழியாக்கம் 2016 ஆகஸ்டுத் திங்கள் 30ஆம் நாளன்று ஆழியாறு வேதாத்திரி மகரிஷி நிறுவிய அறிவுத் திருக்கோயிலில் வெளியிடப்பட்டது.
இல்லறத்தில் துறவறம் பூணும் விந்தையைச் செயலாக்கிய குருநாதர் ஆகஸ்ட் 30ம்
நாளை மனைவி நல வேட்பு தினமாக அறிவித்துள்ளார்..
அத்தகையதோர் விழாவின் போது டிரஸ்டி M. சின்னசாமி அவர்களின் இல்லத்தரசி மனோரமா அம்மையார் இயற்றிய நூலின் இந்தி மொழியாக்கம் வெளியிடப்பட்டது பொருத்தமானது. இந்தப் புத்தகம் இந்தி உலகில் வலம் வந்து நவயுக தமிழகச் சித்தர் வேதாத்திரி மகரிஷியின் பெருமையைப் பரப்பும் என்பதில் ஐயமில்லை.
1.
என் குருநாதர் (தமிழ்)
ஆசிரியர்: மனோரமா சின்னசாமி -
Rs. 50/-
2.
மேரே குருநாத் (இந்தி)
(மேற்படி நூலின் மொழியாக்கம்) எச். பாலசுப்பரமணியம்
Rs. 60/-
Vethathiri Publications
M 11, Periyar Nagar, Erode 638
001.
Phone: 0424 – 226 3845 / 226
3846