Sunday, 11 December 2016

சுகானுபவத்துடன் சுகதேவ் ஆஸ்ரமப் பயணம்

ஹெச். பாலசுப்ரமணியம்


18 புராணங்களில் ஒன்றான சிறப்புடைய வியாசரின் ஸ்ரீமத் பாகவதம் 36000 பாடல்களைக் கொண்டது. ருக்குமணி அம்மாளுக்கு நாரதர் இந்தக் கதையைச் சொன்னார். சுகதீர்த் னப்படும்  இந்தப் புனித இடத்தில்தான் சுகதேவ்ஜி மகராஜ் என்ற முனிவர் பரிக்ஷித்து மன்னருக்கு  ஸ்ரீமத் பாகவதத்தை  ஏழு நாட்கள் தொடர்ந்து சொன்னார். அப்போது அங்கே  அவரோடு 88000 முனிவர்களும் உடனிருந்தனர். இந்த புனிதத் தலத்தில் கால் பதித்தாலே உலகளாவிய அன்பு நம்மில் உருவாகும். மனம் அமைதியுறும். தனித்த தன்னம்பிக்கை உருவெடுக்கும். 5100 வயதுடைய 150 அடி உயரம் கொண்ட அட்சய விருட்சம் இன்னும் இங்கு பசுமையுடன் காணப்படுவது சிறப்பிற்குரியது. மன்னித்தல், உலக அமைதி என்ற உயரிய பண்பின் அடையாளமாக இந்த விருட்சம் இங்கே திகழ்கிறது

  இத்தகைய சிறப்பிற்குரிய சுகதேவ் ஆஸ்ரமத்திற்கு சென்ற மாதம் நாங்கள் பயணித்தோம். மயூர்விகார் தென்னிந்திய சங்கத்திலிருந்து 25 உறுப்பினர்களாக நாங்கள் பயணமானோம். நவம்பர் 12 ஆம் தேதி காலை நாங்கள் புதுடெல்லியிலிருந்து புறப்பட்டோம். குருகுலம் உட்பட்ட ஆஸ்ரமங்கள் நிறைந்த கங்கை கரை நோக்கி எங்கள் புனிதப் பயணம் தொடங்கியது. டெல்லி ஹரித்துவார் நெடுஞ்சாலையில் முசாபர்பூர் என்ற இடத்தில் சுகதேவ் ஆஸரமம் உள்ளது. அன்று கார்த்திகைப் பௌர்ணமி தினம்.  அடுத்த நாள்தான் கார்த்திகை குளியலுக்கான கடைசி தினமாகையால் நிறைய மக்கள் பக்தி பரவசத்துடன் அங்கே குவிந்த வண்ணமிருந்தனர். மாட்டு வண்டிகளிலும் டிராக்டர்களிலும் அந்த புனிதப் பயணத்திற்கு வருகை தந்த அவர்கள் காளைகளை அருகே கட்டி வைத்து விட்டு தற்காலிக குடில்கள் அமைத்து அங்கேயே தனது இறைக் கடமைகளை செய்தனர். அடுத்த தினத்தில் அங்கே கடுகு நுழையக் கூட இடமில்லாத அளவிற்கு அங்கே பொது மக்கள் கூட்டம் அதிக அளவிற்கு இருக்குமாம். நாங்கள் சென்ற அன்றைய தினம் காலை 10 மணி அளவில் சங்கல்ப மந்திரத்துடன் புனிதக் குளியலுக்குப் பின் பித்ரு தர்ப்பணம் செய்தோம். மலைகள் சூழ்ந்த அந்த புனிதத் தலத்தில் அட்சய விருட்சத்தின் அடியே பாகவதம் பிறந்த அந்த தலத்தை தரிசித்தோம். அந்த அழகான புனித ஆஸ்ரமம் மிகுந்த பரவசமான பக்தி அனுபவத்தை தந்தது.  பின் அங்கேயே சாத்வீக பிரசாதத்தை உட்கொண்ட பின், புது டெல்லிக்கு திரும்பினோம். நாங்கள் வரும் வழியெங்கும் நூற்றுக்கணக்கான காளை வண்டிகளும் டிராக்டர்களும் பொது மக்களோடு அடுத்த நாள் கார்த்திகை குளியலுக்கான ஒரு பக்திப் படையாக சென்று கொண்டிருந்தது. பாகவதத் தலத்தில் அன்று அவ்வாறு பக்தியில் திளைத்தோம். இப்போதும் அந்த பயணத்தை நினைக்க நினைக்க மிகவும் பரவசமாகவே இருக்கிறது.