Sunday, 6 September 2015

டாக்டர் ஹெச். பால சுப்ரமணியம் அவர்களின் இந்திய மொழி இலக்கியக் கட்டுரைகள் குறித்து உங்கள் நூலகம் இதழில் எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் அவர்கள் எழுதிய விமர்சனம்



Wednesday, 6 May 2015

தாய்மொழி போற்றுதும் – பாரதியும் பாரதேந்துவும்
                               முனைவர் எச். பாலசுப்பிரமணியம்



சிலம்பை யாத்த இளங்கோ அடிகள் தெள்ளு தமிழில் பாடினார்:
                   ஞாயிறு  போற்றுதும்!  ஞாயிறு   போற்றுதும் !!
                        திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!!
                  மாமலை போற்றுதும்!   மாமலை  போற்றுதும்!!
இரண்டாயிரம் ஆண்டுகள் சென்றபின் பாரத நாட்டில் தாய்மொழிகளுக்கு நலிவு நேர்ந்தது. வடக்கிலிருந்து பாரதேந்துவும் தென்னாட்டிலிருந்து பாரதியும்  ஒரே குரலில் பாடினார்கள்:
         தாய்மொழி போற்றுதும்! தாய்மொழி போற்றுதும்!!
ஆங்கில மோகத்தினால் தாய்மொழிக்கு நேர்ந்த நலிவினைக கண்டு  இருவரும் மனம் பதைபதைத்தனர். கோபுரத்தின் மீதேறி நின்று உரக்கக் கூவுவதுபோல, பாரதேந்து வித்யா நகரமான காசித் தலத்திலிருந்து முழங்கினார்:
         நிஜ பாஷா உன்னதி அஹை ஸப் உன்னதி கோ மூல்
         அனைத்து உயர்வுகளுக்கும் ஆணிவேர்
         தாய்மொழி ஏற்றமே
தாய்த்திருநாட்டில் பாரதியார் பாப்பாவுக்கு இதோபதேசம் செய்கிறார்:
                                                                                                                                                (1)
   தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற – எங்கள்
              தாயென்று கும்பிடடி பாப்பா
 அமிழ்தில் இனியதடி பாப்பா! – நம்
            ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!
   சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே; - அதைத்
              தொழுது படித்திடடி பாப்பா!
இன்றைக்குச் சரியாக நூறு வருடங்களுக்கு முன் தமிழநாட்டுப் பாப்பாவுக்கு பாரதி போதித்த அமுத வரிகள்!  இன்று எத்தனை பெற்றோர் தம் குழந்தைகளுக்கு இந்த வரிகளை உள்ளபடியே போதித்துத் தமிழமுதம் பருகச் செய்கிறார்கள்?  மூன்று வயதிலிருந்தே அல்லவா தம் பிஞ்சுகளை போட்டிச் சந்தையில் மாட்டி வதைக்கிறார்கள்.  பசுவைக்காட்டி ‘கௌ’ ‘கௌ’ என்று அதன் பிஞ்சுமண்டையில் புகுத்துகிறார்கள்.  பெற்ற தாயை ‘மம்மி’யாக்குகிறார்கள். தாய்மொழியில் ஒரு அட்சரம் கூடப் பயிலாமல் பி.ஏ. பட்டம் பெறும் விந்தை இந்தப் பாரத நாட்டில் மட்டும் தான் நிகழ்கிறது.
ஏன் பயில வேண்டும் தாய்மொழி? கணிதம், அறிவியல், சமூகவியல் போன்ற பாடங்களை ஏன் தாய்மொழியில் பயிற்ற வேண்டும்?  .  
மொழியும் பண்பாடும் ஒன்றை விட்டொன்றைப் பிரிக்க முடியாதபடி இணைந்துள்ளன என்கிறார் ராபர்ட் லாடோ ‘லிங்க்விஸ்டிக்ஸ் அக்ராஸ் கல்ச்சர்’ என்ற தமது நூலில்.  அதாவது ஒரு மொழியைக் கற்கும்போது அதன் கலாச்சாரமும் மாணவனின் உணர்வில் படிந்து விடுகிறது. எடுத்துக் காட்டாக, தில்லியில் புகழ் வாய்ந்ததோர் பப்ளிக் ஸ்கூலில் மூன்றாவது வகுப்பில் படிக்கும் தமிழ்ச் சிறுவனிடம் வள்ளுவர் பெயரைக் கூறியபோது ‘வள்ளுவரா? ...யார் அவர்?’ என்று கேட்டான்..  பள்ளியில் நர்சரியிலிருந்தே ஆங்கில மீடியம், போதாக்குறைக்கு பிரெஞ்சும் பயில்கிறான்.  அந்த நாட்டின்  சூழல்,. பறவைகள், கவிஞர்கள் பெயர்கள் எல்லாம் தெரியும்.  அவ்வையார்-ஆத்திசூடி, வள்ளுவர்-குறள் பற்றி அறவே தெரியாது அச்சிறுவனுக்கு. . இது தான் இன்றைய நிலை, இளைய தலைமுறை மீது  நமக்குள்ள அக்கறை இது தான்.   
மொழிகள் கற்பதில் தவறில்லை, பிற சமூகங்களின் பண்பாட்டைப புரிந்து கொள்வதும் அவர்களுடன் கலந்துறவாடுவதும் நன்றே. ஆனால், தாய்ப்பாலுடன் பெற்ற மொழியில் போதிய  அறிவு பெறாமல், பிறமொழியில் பல கலைகள் பயின்றாலும் அவர் பல கற்றும் கற்றிலாரே என்கின்றனர் பாரதியும் பாரதேந்துவும். . சிறுவயதிலேயே அந்நிய மொழியை முதல் மொழியாகவும் பயிற்று மொழியாகவும் ஏற்றுக்கொள்வது தம் கால்களைத் தாமே கோடரியால் தறித்துக் கொள்வதற்கொப்பாகும். அவ்வாறு தறிக்கப்பட்ட கால்கள் ஒருநாளும் தாய்மண்ணில் ஒட்டா. கல்விப்பயிற்சிகளை முடித்தபின் அந்த மொழி பயிலும் நாடுகளுக்குத் தொண்டு புரிய ஓடிவிடும். நம் நாட்டில் நிகழ்ந்து வரும் இந்த அவலக்கூத்தினை நாள்தோறும் கண்கூடாகப் பார்த்தும்  அதே தவற்றைத்  தவறாமல் செய்து வருகிறோம்.
தாய்மொழிக்கல்வியின் அவசியத்தை நம் மூத்த தலைவர்கள் அறியாமல் இல்லை.  மகாத்மா காந்தி, வினோபா, ஜெ.சி.குமரப்பா, காமராஜர், அவினாசிலிங்கம் செட்டியார் போன்ற தலைவர்கள் இருபதாம் நூற்றாண்டிலேயே வாழ்ந்து, இதற்கென இயன்றவரை முயன்று, மறைந்து போயினர். 
 ‘ஹரிஜன்’ (9.7.1938) இதழில்  காந்தியடிகள் தம் அனுபவத்தைக் கூறுகிறார்: “பன்னிரண்டு வயதில் நான் குஜராத்தி மொழியில் கணிதம், சரித்திரம், பூகோளப் பாடங்களை ஓரளவு கற்றிருந்தேன். உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்த முதல் மூன்று  ஆண்டுகள் ஆங்கிலம் தவிர பிற பாடங்கள் தாய்மொழியிலேயே கற்பிக்கப்பட்டன. பின்னர் ஆங்கில மீடியம் தொடங்கியதும் கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டது போன்று தவித்தேன்.  ஜியாமிட்ரியை ஆங்கிலத்தில் கற்பித்தபோது தலை சுற்றியது.  ஆசிரியர்கள் ஆங்கிலத்தை எங்கள்  தலையில் புகுத்துவதிலேயே முனைப்பாக இருந்தனர்.  நான்கு ஆண்டுகளில்  ஆங்கில மீடியத்தில் நான் எந்த அளவு  ஆல்ஜிப்ரா, ஜியாமிட்ரி, ஜாகரபி கற்றேனோ அதனை குஜராத்தி மூலமாக ஒரே ஆண்டில் கற்றிருக்க முடியும். பிறகு அந்த அறிவை நாட்டு மக்களின் சேவைக்குப் பயன்படுத்தவும் இயலும்.  தாய்மொழி வழியாக விஷயங்களைக் கிரகிப்பது எளிதாகவும் தெளிவாகவும் இருக்கும். குஜராத்தி மொழியில் என் ஆளுமையும் விருத்தி அடைந்திருக்கும். இது மட்டுமல்ல,  என் ஆங்கில அறிவு எனக்கும் ஆங்கிலம்  புரியாத என் குடும்பத்தினருக்கும் இடையில் தடை ஏற்படுத்தியது. என் நடையுடை பாவனைகளில் மாற்றம் ஏற்பட்டது. இது எனக்கு மட்டும் நேர்ந்த தனி அனுபவம் அல்ல.  பெரும்பாலானவர்களின் அனுபவம் இது தான்.”
‘யங் இண்டியா’ இதழில் காந்திஜி  எழுதுகிறார் – ‘கணிதம், அறிவியல் போன்ற பாடங்களை ஆங்கில மீடியத்தில் பயில்வதன் விளைவு பற்றி புனே நகரில் பேராசிரியர்களுடன் பேசுகையில், அவர்கள் இதனால் ஒவ்வொரு மாணவனுடையவும் ஆறு ஆண்டுகள் வீணாகின்றன என்று தெரிவித்தனர்.  பள்ளிகளின் எண்ணிக்கையை ஆயிரமாயிரம்  மாணவர் எண்ணிக்கையுடன் பெருக்கி  எத்தனை ஆயிரம் ஆண்டுகள் வீணாயின என்று கணக்குப் பார்த்துக் கொள்ளுங்கள்.’(Speeches and Writings of Mahatma Gandhi, p. 318-320) என்கிறார். உண்மை என்னவெனில் இவ்வாறு பிற மொழி மூலம் கற்கும் அறிவும் அரைகுறையானதே.
பாரதி  தம் ‘சுயசரிதையில் கூறுவதும் இதுவே தான். :
        கணிதம் பன்னிரெண் டாண்டு பயில்வர், பின்
            கார்கொள் வானிலோர் மீநிலை தேர்ந்திலார்;
       அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும்
            ஆழ்ந்தி ருக்கும் கவியுளம் காண்கிலார்,
  இதோடு நிற்கவில்லை. இதனால் விளையும் தீமையையும் எடுத்துரைக்கின்றார்:  –
       கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்,
            காளி தாசன் கவிதை புனைந்ததும்,  
                                                                                                                                                (4)
        உம்பர் வானத்துக கோளையும் மீனையும்
            ஓர்ந்த ளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்
         சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்,
             தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்,
         பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
             பார ளித்துத  தர்மம் வளர்த்ததும்
         அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்து
              ஆங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர்    (பாரதியார், சுயசரிதை ).
என்றுரைக்கும் பாரதி தமது அனுபவக்கதையைச் உரைக்கின்றார் – சூதும் வாதும் அறியாத  தந்தை மகனின் நலம் நாடி நெல்லை உயர்நிலைப்பள்ளியில் ஆங்கிலக்கல்வி கற்க அனுப்ப, ஆங்கு பெற்ற துயரை பாரதி மனக் குமுறி அறைகின்றார் –
         பொழுதெ  லாமுங்கள் பாடத்தில் போக்கி நான்
         மெய்யயர்ந்து விழிகுழி வெய்திட
             வீறிழந்தென துள்ளநொய் தாகிட
 ஐயம் விஞ்சிச சுதந்திர நீங்கி யென்
              அறிவு வாரித் துரும்பென் றலைந்ததால்
         செலவு தந்தைக்கோ ராயிரஞ் சென்றது
              தீதெ னக்குப் பல்லாயிரஞ் சேரந்தன
                                                                                                                                    (5)
        நலமொ ரெட்டுணை யுங்கண்டி லேனிதை
               நாற்ப தாயிர்ங் கோயிலிற் சொல்லுவேன்.    (பாரதியார், சுயசரிதை)
பாரதிக்கும் பாரதேந்துவுக்கும் இடையே வியத்தகு ஒற்றுமைகள் உண்டு. இருவரும் தத்தம் மொழி இலக்கிய வரலாற்றில் நவீன யுகத்தின் முன்னோடிகளாக விளங்கினர். குழந்தைப் பருவத்திலேயே தாயை இழந்த  இருவரும் தாய்நாட்டையே பெற்ற தாயெனப் போற்றினர். தாய்மொழியை உயிரினும் மேலாக நேசித்தனர். நடுவயதினை எட்டு முன்பே அமரராகி விட்ட பாரதியும் பாரதேந்துவும் எந்தவொரு படைப்பாளியும்  தம் முழு ஆயுளில் செய்து முடிக்க இயலாத அளவுக்கு  இலக்கிய சாதனை புரிந்துள்ளனர். இவ்விருவர் வாழ்ந்த காலமும் சூழலும் மட்டுமே வேறுபடுகின்றன. பாரதேந்து வாழ்ந்தது  வெற்றி பெறாத முதல் சுதந்திரப் போரைத் தொடர்ந்து பிரிட்டனின் நேரடி ஆட்சி துவங்கி, அடக்குமுறை உக்கிரமாக இருந்த காலத்தில். . ஆங்கிலம் கற்ற மேல்தட்டு மக்கள் நடை உடை பாவனைகளில் ஆங்கிலேயரைப் போலவே செயல்பட்டு ஏழை எளிய மக்களை அடக்குவதில் அரசுக்கு ஒத்தாசையாக இருந்தனர். பத்திரிகை சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கவில்லை. அத்தகைய சூழலில் பாரதேந்து தனியொருவராகவே மக்கள் மனத்தில் தேசிய உணர்வினையும்   தாய்மொழிப் பற்றையும் வளர்க்கப் பாடுபட்டார். ஆங்கிலேயரைப் புகழ்வது போலவே தொடங்கி மறைமுகமாகத் தாக்க வேண்டிய நிலை. இதற்காக அவர் நாடகங்களைப் பயன்படுத்தினார்.
  அங்கரேஜ் ராஜ் ஸுக ஸாஜ ஸஜே ஸப் பாரீ 
ஆங்கில ஆட்சியில் நாம் சகலவித சுகங்களும் பெற்று வாழ்கிறோம் என்று கூறி அடுத்த அடியிலே வேதனை தொனிக்கப் பாடுகிறார் -
        பை தன் விதேஷ் சலி ஜாத் இஹை அதி க்வாரீ
ஆனால் நம் செல்வமெல்லாம் அயல்நாடு செல்கிறதே இதுவே பெரும் கவலை என்கிறார்.
நாட்டின் நலிவுகளுக்கெல்லாம் மூல காரணம் தாய்மொழி அறிவு இன்மையே என்பதை நன்குணர்ந்த பாரதேந்து அடிமை மோகத்தில் மயங்கிக் கிடக்கும் மக்களை எழுப்புகிறார்:
        நிஜ பாஷா உன்னதி அஹை ஸப் உன்னதி கோ மூல்
        அனைத்து உயர்வுகளின் ஆணிவேர் தாய்மொழி ஏற்றமே
        அங்க்ரேஜீ படி கே ஜதபி ஸப் குன் ஹோத் ப்ரவீன்
         பை நிஜ பாஷா ஞான் பின் ரஹத் ஹீன் கே ஹீன்
         ஆங்கிலம் பயின்று   மேன்மை பல பெற்றிடினும்
         சொந்த மொழி   கல்லாதார்   ஈனரினும்  ஈனரே
         படோ லிககோ கோஉ லாக் வித பாஷா பஹுத் ப்ரகார்
         பை ஜப ஹீ கச்சு ஸோச்சிஹோ நிஜ பாஷா அனுஸார்
         பயிலுங்கள் பல்மொழிகள் வித விதமாய்
         எனின் சிந்தியுங்கள் சொந்த மொழியில் மட்டுமே
         லகஹு ந அங்க்ரேஜ்  கரோ உன்னதி பாஷா மாஹி
         ஸப் வித்யா கே  க்ரந்த்  அங்க்ரேஜின் மாஹி லகாஹி
         காணீர் வெள்ளையரை ஏற்றம் பெறுவீர் சொந்த மொழியில்
          கொணர்நதனர் அவர் தம்மொழியில் சகல அறிவுச்செல்வம்
உண்மை தான். உலகில் எந்த மொழியிலும் ஒரு நல்ல நூல் வெளிவந்தால் ஒரே மாதத்தில் எளிய மொழிநடையில் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு தயாராகி விடுகிறது. எனவே தான் பாரதேந்துவும் பாரதியும் ஒரே குரலில் பேசுகிறார்கள்:
         விவித கலா சிக்ஷா  அமித் ஞான் அனேக் ப்ரகார்
         ஸப் தேஸன் சே லை  கரஹு பாஷா மாஹி ப்ரசார்

      சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
           செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
 இதை இன்னும் விளக்கமாகக் கூறுகிறார் பாரதி -
         பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
         தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்.
தாய்மொழி வளர்ப்பில் பாரதியின் பங்களிப்பு கணிசமானது.  நிறுவனமாகச் செய்ய வேண்டிய பணியை பாரதி தனியொரு மனிதராகவே செய்தார்.  ‘வாழிய செந்தமிழ்’ என்று பாடியதோடு நில்லாமல், செந்தமிழ் செழித்து ஓங்கி மக்கள் நாவில்  தவழவும் தாமே வழிகாட்டியாக நின்றார்.‘இயன்றவரை தமிழே பேசுவேன்; தமிழே எழுதுவேன்; சிந்தனை செய்வது தமிழிலே செய்வேன்” என்று உறுதிமொழி எடுத்துக் கொண்ட பாரதி வாழ்நாள் முழுதும் அதன்படியே ஒழுகினார். 
‘வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே!’ என்று பாடிய பாரதி நமக்கு  தாய்மொழியின் ஆற்றலை எடுத்துரைக்கிறார்.  ‘வானம் அளந்தது  அனைத்தும் அளந்திடும் வண்மொழி’ என்கிறார்.  இன்றும்   வானம் அளந்ததனைத்தையும்  அறிந்து அது மேன்மேலும்  வளர வேண்டுமானால் தமிழர்கள் அதனை அனைத்துத் துறையிலும் பயன்படுத்த வேண்டும்.

பாரதி  யார்  என்று பாரதிதாசன் தெரிவிக்கிறார் -   “பாரதி செந்தமிழ்த் தேனீ   -  சிந்துக்குத் தந்தை – கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு – மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன் – சாதிப் படைக்கு மருந்து – தமிழைச் செழிக்கச் செய்தான், தமிழால் தகுதி பெற்றான்.”  நாமும் தமிழைச்செழிக்கச் செய்வோம்! தமிழால் தகுதி பெறுவோம்!! 

Tuesday, 21 April 2015

குறுகத் தறித்த குறள் – தமிழிலும் வடமொழியிலும்

                                    முனைவர் எச்.பாலசுப்பிரமணியம்




உலகப்பொதுமறையாம் திருக்குறளின் சமஸ்கிருத மொழியாக்கங்களைப் பார்வையிடுமுன், இவ்விரண்டு மொழிகளின் உறவு மற்றும் இயல்பு குறித்து தெளிவு பெறுதல் அவசியமாகிறது.  புதுச்சேரியில் வாழ்ந்த மகரிஷி அரவிந்தர் ‘ஆன் த வேதாஸ் என்ற தமது நூலில் ருக்வேதத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.  மட்டுமல்ல, தமிழ் எண்ணுப்பெயர்களும் ருக்வேதத்தில் அப்படியே உள்ளனவாம். அவர் . மேலும் கூறுகிறார்: ‘வேதமொழி சமஸ்கிருதத்துக்கும் கிரேக்கம், இலத்தீன், ஜெர்மானியம்  போன்ற மொழிகளுக்கும் இடையேயான் தொடர்பை ஆராய முயலும்போது எனக்கு இன்றைய சமஸ்கிருதம் உதவுவதில்லை, எனக்குக் கைகொடுக்கும் மொழி தமிழே என்கிறார். ஆம், இன்றைய சமஸ்கிருதம் கி.மு .ஐநதாம் நூற்றாண்டில் பாணினி உருவாக்கியதே. எனவே தான் புதுச்சேரி முனிவர் அரவிந்தருக்குப் பண்டை மொழிகளின் ஆராய்ச்சியில் இன்றைய வடமொழி உதவவில்லை, தொன்றுதொட்டு வழங்கி வரும்  கன்னித்தமிழ் கைகொடுத்தது.
தமிழ் தோன்றி வளர்ந்தது குமரிக்கண்டம் தொட்டு ராஜஸ்தானத்தில் ஆரவல்லி மலைப் பிரதேசம் வரையிலான நாவலந்தீவில். இதற்குபின்   கடலிலிருந்து எழும்பிய இமயமலைப் பகுதியில் தான் கவிஞர்கள் ருக்வேதப் பாடல்களை இயற்றினர். . அந்த ருக்வேதத்திலும் தமிழ்ச் சொற்கள்  விரவியுள்ளதைக் கொண்டு இரு மொழிகளிடையேயும் கொடுக்கல் வாங்கல் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கி விட்டது என்பதை  அறியலாம். ஒரேஒரு வேறுபாடு,  கலிபோர்னியாப் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் கூறுவது போல, தமிழில்  இலக்கிய இலக்கணங்கள் தோன்றி ஆசிரியர்கள் கவிதையியலை வரையறை செய்த நேரத்தில் வடபுலக்கவிஞர்கள் சமஸ்கிருதத்தில்  கவிதை புனைய ஆரம்பித்தனர்.
சான்றாக, கி.பி. மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவனாகக் கருதப்படும் காளிதாசன் சங்க இலக்கியங்களிலிருந்தும் சிலப்பதிகாரத்திலிருந்தும் ‘மொண்டுகொண்ட அகப்பைகள் மிகப்பல. சீக் பரீட் லியன் ஹார்டு என்னும் மேலை அறிஞர் காளிதாசனின் கவிதை உத்திகள் சங்க இலக்கியங்களிலிருந்து எடுக்கப்பட்டவை என்பதற்குப் பல சான்றுகள் தந்துள்ளார்.   கர்நாடகப் பலகலைக் கழகத்தில் வடமொழிப் பேராசிரியராகப் பணியாற்றிய கே.கிருஷ்ணமூர்த்தி இதை ஏற்றுக்கொண்டு பழந்தமிழ் இலக்கியங்கள் காளிதாசனுக்கு மகாராஷ்டிரப் பிராகிருத மொழி மூலமாகச் சென்றிருக்க வேண்டும் என அறிவிக்கிறார்.  மேலும் பார்வையிடும்போது வடமொழியில் தூது இலக்கியங்கள் காளிதாசனுக்கு முன் படைக்கப்பெறவில்லை. அவனது மேகதூதத்திற்கு சங்கத் தூதுப் பாடல்களும், குமாரச்சம்பவத்திற்கு பரிபாடலும் திருமுருகாற்றுப்படையும் உந்துச்சக்திகளோ உவமைக் கருவூலங்க்களோ ஆகப் பயன்பட்டிருக்கவேண்டும் என்று பேராசிரியர் ப. மருதநாயகம் கருதுகிறார்.
பாணினி உருவாக்கிய சமஸ்கிருதத்தில் தான் வேதங்கள் தவிர்த்த இதிஹாச-புராணங்கள், காவிய-நாடகங்கள், ஆயுர்வேதம்,  ஜோதிடம்-வானவியல், தத்துவம் என பல்வேறு துறைகள் சார்ந்த நூல்கள் இயற்றப்பட்டுள்ளன, மொழியாக்கங்கள் மூலமாக்வும் பெறப்பட்டுள்ள்ன. இந்த சமஸ்கிருதத்திற்குச சில சிறப்பியல்புகள் உண்டு – தாது என்னும் அடிச்சொல்லுக்கு முன் உபஸர்க்கம் என்ற முன்னொட்டும், ப்ரத்யயம் என்ற பின்னொட்டும்  சேர்த்து விரும்பியபடி பல்வேறு பொருள்மாற்றங்கள் பெறுதல், தொகை-முறைமையினால் விரிவான கருத்துக்களை சுருங்கிய சொற்களில் வடித்தல்,  விபக்தி என்னும் வேற்றுமை வடிவத்தினால் சொற்கள் இடம் மாறி வந்தாலும் வாக்கியத்தின் பொருள் மாறாமை முதலியன.  இத்தகு திறன்கள் காரணமாக பிறமொழிகளுடன் ஒப்பிடுகையில் வடமொழி பண்டைத்தமிழ்க் கவிதைகளை மொழியாக்கம் செய்வதில் ஓரளவு வெற்றி கண்டுள்ளது.
திருக்குறள் சமஸ்கிருத மொழியாக்கங்கள்
இதுவரை வடமொழியில் திருக்குறளின் ஐந்து மொழியாக்கங்கள் கிடைத்துள்ளன.  இவற்றுள் இரண்டு மொழிபெயர்ப்புகள்  முழுமை பெறவில்லை. திரு. ஸ்ரீநிவாசராகவனின் மொழியாக்கம் ஆங்காங்கே பத்திரிகை இதழ்களில் வெளிவந்து நூல் வடிவு பெறவில்லை. மீதி இரண்டு மொழியாக்கங்கள் இங்கே ஒப்பீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன –(1) திரு என். ஸ்ரீராமதேசிகனின் சமஸ்கிருத மொழியாக்கம் (2) திரு கோவிந்தராய் ஜெயின் மொழிபெயர்த்த  குறள் காவ்ய. ஸ்ரீராமதேசிகன் திருக்குறள் தவிர எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், நாலடியார் திருப்பாவை, கம்பராமாயணம் என தமிழ இலக்கியங்களை வடமொழிக்குக் கொண்டுசென்றவர்.  கோவிநத ராய் குறளை மட்டுமே  மொழியாக்கம் செய்தவர்
ஒப்பீடு
முதற் குறளைப பார்க்கலாம் –
     அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
            பகவன் முதற்றே உலகு.
ஸ்ரீராம:  
     अकारादेव निर्यान्ति समस्तान्यक्षराणि च |
      चराचर – प्रपंञ्चोऽयं ईश्वरादेव जायते    ||
     அகாராதேவ நிர்யாந்தி ஸ்மஸ்தான்யக்ஷராணி ச |
     சராசர பிரபஞ்சோ யம் ஈஸ்வராதேவ ஜாயதே ||
கோவிந்த
      ‘अ’वर्णों वर्तते लोके शब्दानां प्रथमो यथा  |
      तथादि भागवानस्ति पुराण पुरुषोत्तम: ||
         ‘வர்ணோ வர்த்ததே லோகே சப்தானாம் பரதமோ யதா |
        ததாதி  பகவானஸ்தி புராண புருஷோத்தம:  || 
முதல் மொழிபெயர்ப்பு பொழிப்புரை போல காணப்படுகிறது. – எல்லா எழுத்துக்களும் அகரத்திலிருந்து புறப்படுகின்றன. சராசரப் பிரபஞ்சம் ஈஸ்வரனிலிருந்தே பிறக்கிறது., என்கிறார்.  ஆனால் இரண்டாவது பெயர்ப்பு ஓசை நயத்திலும் பொருட்செறிவிலும் மூலத்தை ஒத்து காணப்படுகிறது. – ‘அஎன்னும் எழுத்து ஒலிகளுள் முதன்மை பெறுகிறது, இந்தப் பிரபஞ்சத்திருக்கு பகவான் முதல்வன் என்பது போல. 
குறள்
     குழல் இனிது யாழ் இனிது எனபதம் மக்கள்
     மழலைச்சொல் கேளா தவர்.
ஸ்ரீராம
      अस्पष्ट-मधुरं पुत्र-भाषितं शृणोति य:।
        स एव  कथयेत् रम्यं वीणा वेण्वादि वादितम्।।
        அஸ்பஷட மதுரம் புத்ர-பாஷிதம் ச்ருணோதி யஹ |
       ஸ ஏவ கதயேத் ரம்யம் வீணா வேண்வாதி வாதிதம் ||
கோவிந்த்  
        वेणु-ध्वनी सुमाधुर्यं वीणा स्यादीयसी बहु।
        एवं वदन्ति येर्नैव श्रुता संतान-काकली।।
       வேணுதவனி  ஸுமாதுர்யம் வீணா ஸ்யாதீயசீ பஹு |
       ஏவம் வதந்தி யைர்நைவ ச்ருதா ஸநதான காகலீ ||
ஸ்ரீராம்தேசிகனின் முயற்சியை  விட கோவிந்தராயின் மொழியாக்கமே வள்ளுவரின் கருத்தை திறம்பட வெளிப்படுத்துகிறது.  ஸ்ரீராம தேசிகன்  மழலைசொல்லை அஸ்பஷ்ட மதுரம் அதாவது தெளிவற்ற இனிய என்று பெயர்க்கையில் கொவிந்தராய் மழலை என்பதை காகலி என்ற சொல்லால்  அழகாக விளக்குகிறார். காகலி மழலை என்பதன் நேர்மொழியாக்கமல்ல.  எனினும் கிள்ளைமொழியை உணர்த்தும் இந்தச் சொல் இங்கே நேர்த்தியாகப் பொருந்துகிறது.  . கேளாதவர் என்பதில் உள்ள எதிர்மறை இரண்டாவது மொழியாக்கத்தில் அப்படியே பின்பற்றப்பட்டுள்ளது.  முதல் மொழியாக்கத்தில் ‘எவனொருவன் புத்திரனின் தெளிவற்ற இனியமொழியைக் கேட்பானோ அவனே என்று வருகிறது.  .
குறள்
      ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
      சான்றோன் எனக்கேட்ட தாய்.
ஸ்ரீராம
      ‘पुत्रस्ते गुणवान् विद्वान्’ इति वाक्यं महात्मनाम्।
        श्रुत्वैव जननी तस्य जननादपि तुष्यति।।
      புத்திரஸ்தே குணாவான் வித்வான் இதி வாக்யம் மஹாத்மனாம |
      ச்ருத்வைவ ஜனனீ தஸ்ய ஜனனாதபி துஷ்யதி  || 
கோவிந்த
        प्रकाशते सुतोत्पत्या मातुर्मोदस्य वारिधि:।
        तत्कीर्ति-श्रवाणात्तस्या उद्वेल:: सा च जायते।।
      பரகாசதே ஸுதோதபத்யா மாதுர்மோதஸ்ய் வாரிதிஹி |
      தத் கீர்த்தி சரவாணாத்த்ஸ்யா உத்வேலஹ் ஸா ச ஜாயதே ||
‘உன் மகன் குணவான் வித்வான் என்ற் ஆன்றோர் வாக்கைக் கேட்ட தாய் அவன் பிறந்தபோழ்து ஏற்பட்டதை விட் அதிக மகிழ்ச்சி அடைகிறாள். – ஸ்ரீராம்தேசிகனின் இந்த மொழியாக்கம் மூலத்திலுள்ளது போன்ற அமைப்பில் வருகிறது.  கோவிந்தராய் வேறுவிதமாகக் கொண்டுபோகிறார் – மகனின் பிறப்பினால் தாயின் மகிழ்ச்சி கடல் போலக் கரைபுரண்டோடுகிறது.  அவன் புகழைக் கேட்கும் பொது அதில் அலைகளின் எழுச்சி உண்டாகிறது.  இது மூல்த்திலிருந்து பிறழ்ச்சி.
குறள் 
      கற்க கசடறக் கற்பவை கற்றபின்
      நிற்க அதற்குத் தக.
ஸ்ரீராம
        अध्येतव्या;  समे  ग्रन्था: निस्संदेहं यथार्थत:।
        अधीत-ग्रंथ दृष्टेन यथायुक्तं प्रवर्तताम्।।
      அத்யேதவ்யா: ஸமே கரந்தா: நிஸ்ஸந்தேஹம் யதார்த்தத: |
      அதீத-கரநத த்ருஷ்டேன யதாயுக்தம் ப்ரவர்த்ததாம் ||
கோவிந்த
        अधिगम्यं हि यत् ज्ञानं सातत्येन तदर्जयेत्।
        आचारेच्च तथा नित्यं विद्या-प्राप्तेरनन्तरम्।।
      அதிகம்யம் ஹி யத் ஜ்ஞானம் ஸாதத்யேன ததர்ஜயேத் |
      ஆசரேச்ச ததா நித்யம் வித்யா-ப்ராப்தேரனந்தரம் ||   
கற்க வேண்டிய நூல்களை சந்தேகமற பொருளுடன் கற்க வேண்டும்.  கற்ற நூல்களில் கூறியவைக்கேற்ப உசிதம் போல நடக்கவேண்டும் என்கிறது முதல் மொழியாக்கம்.  இரண்டாவதோ, கற்க வேண்டியனவற்றை ஐயம் திரிபறக் கற்கவேண்டும். கற்றபின் எப்பொழுதும் அதன்படி ஒழுக வேண்டும் என குறளுரையை உள்ளபடியே முன்மொழிகிறது.
குறள் ௦௦
      இனிய உளவாக இன்னாத கூறல்
       கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.
ஸ்ரீராம
      कथनं कठिनोक्तीनां मधुरे वचसि स्थिते।
       मधुरं फलमुत्स्रुज्य कषायस्याशनं भवेत्।।
      கதனம் கடினோக்தீனாம மதுரே வசஸி ஸ்திதே |
      மதுரம் பலமுதஸ்ருஜய கஷாயஸ்யாசனம் பவேத் ||
கோவிந்த
        विहाय मधुरालापं कटूक्ति योथ भाषते।
        अपक्वं ही फलं भुङ्कते परिपक्वं विमुच्यत।।
      விஹாய மதுராலாபம் கடுக்தி யோ த பாஷதே |
      அபக்வம் ஹி பலம் புங்க்தே பரிபக்வம் விமுசயத ||:
     
முதல் மொழிபெயர்ப்பில் காய் கவர்ந்தற்று என்ற சொற்றொடர் சரியாக பெயர்க்கப்படவில்லை.  இனிமையான பழத்தை விடுத்து கஷாயத்தை  உண்பது போல என்று வருகிறது. இரண்டாவது மொழியாக்கத்தில் காய் என்பதற்கு அபக்வ பலம் என்று வருவது பொருத்தமானது.  மட்டுமல்ல, இனிய உளவாக் என்பதைக கூற   மதுர ஆலாப் (இனிமையான சொல்லாடல்) என்ற தொடர்  பயன் பட்டுள்ளது மொழியாக்கத்திற்கு மெருகூட்டுகிறது.
குறள்
       முகந  நட்பது நட்பன்று நெஞ்சத்து
        அகநக நட்பது நட்பு.
ஸ்ரீராம

        विनोद कारिणी गोष्ठी निवसते मित्रता चिरम्।
          मैत्री प्रेमामृतोद्भूता ह्रुदयाह्लाद कारिणी।।
        வினோதகாரிணீ கோஷ்டீ நிவஸதே மித்ரதா சிரம் |
        மைதரீ ப்ரேமாம்ருதோத்பூதா ஹ்ருதயாஹ்லாதகாரிணீ ||
கோவிந்த
          मैत्री मुखविकासेन केवलं न ही जायते।
           हृदयस्य विकासोपि सुसख: कुरुते यथा।।
        மைத்ரீ முகவிகாசேன கேவலம் ந ஹி ஜாயதே |
        ஹ்ருதயஸ்ய விகாஸோபி ஸுஸக: குருதே யதா ||

முதல் மொழிபெயர்ப்பு மூலத்திலிருந்து அகன்று காணப்படுகிறது.  முதல் அடியுடன்  தொடர்பில்லாத ஏதோ ஒரு கருத்து மொழியப்பட்டுள்ளது.  அடுத்த அடி ஓரளவுக்கு பொருள் தருகிறது.  இரண்டாவது மொழியாக்கம் குறளை ஒத்து நடக்கிறது.  முகநக என்ற சொல் முகவிகாஸ என்றும் அகநக என்பது  ஹ்ருதயவிகாஸ என்றும் பொருத்தமாக அமைந்துள்ளது
குறள் 
      அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
      சிறுகை அளாவிய கூழ்.
ஸ்ரீராம
      दत्तं  यत् पुत्रहस्तेन सामान्यमपि भोजनम्।
        अमृतादाधिकं तत्तु वर्तते मधुरं पितु:।।
      தத்தம் யத் புத்ர ஹஸ்தேன ஸாமான்யமபி போஜனம் |
      அம்ருதாததிகம் தத்து  வர்த்ததே மதுரம் பிது: ||

கோவிந்த
       शिशुभिर्लघु हस्ताभ्यां मथ्यते यत् सुभोजनम्।
       तद्रसास्वदानं नूनं पीयूष – स्वाद – सन्निभम्।।
      சிசுபிர் லகு ஹஸ்தாப்யாம் மத்யதே யத் ஸுபோஜனம் |
      தத் ரஸாஸ்வாதனம் நூனம் பீயூஷ ஸ்வாத ஸந்நிபம் ||
முதல் மொழிபெயர்ப்பில் ‘மகன் கையால் தந்த உணவு என்று வருகிறது.  கூழ் ஒருவேளை அந்தப் பண்பாட்டில் இடம் பெறாத காரணத்தினால் ‘ஸாமான்ய போஜனம் என்று பெயர்க்கப்பட்டிருக்கலாம்.  இரண்டாவது மொழியாக்கத்தில் மக்கள் என்ற சொல் சிசு அதாவது குழந்தைகள் என பயன்பட்டுள்ளது சிறப்பானது.  கூழ் என்ற கருத்தை விளக்க குழந்தைகள் கையினால் கடையப்பட்ட உணவு – மதிதம் ஸுபோஜனம் -  என்ற தொடர், அழகாகப்பயன்பட்டுள்ளது.
இதுவரையிலும் இரண்டு சமஸ்கிருத மொழியாக்கங்களை ஒன்றோடொன்று  ஒப்பிட்டோம்.  இனி, காமத்துப் பாலை கோவிந்த ராய் ஜெயின் மொழிபெயர்க்காது விட்டுவிட்டதால் ஒரு சில குறட்பாக்களை  ஸ்ரீராமதேசிகன் மொழியாக்கத்துடன் மட்டும் பார்ப்போம்.
குறள்
      கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
      நோக்கமிம் மூன்றும் உடைத்து.
ஸ்ரீராம
       किं वान्तक; किमु मृगी किन्नु स्यान्नेत्रमेव च।
         त्रयणामपि सादृश्यं दृष्ट्यामस्यास्तु दृश्यते।।
       கிம் வாந்தக: கிமு ம்ருகீ கிந்நு ஸ்யாத் நேதரமேவ ச |
       த்ரயாணாம்பி ஸாத்ருசயம் த்ருஷட்யாமஸ்யாஸ்து த்ருச்யதே ||
மொழியாக்கம சிறப்பாகவே அமைந்துள்ளது.  அநதக, ம்ருகீ என்ற சொற்கள் கூற்றத்தையும் பிணையையும் சரியாகப் புலப்படுத்துகின்றன.
குறள்
      யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
       தான் நோக்கி மெல்ல நகும்.
ஸ்ரீராம
        मयि पश्यति सा भूमिं पश्यन्नम्रमुखी स्थिता।
          मय्यपश्यति मां दृष्ट्वा कुर्यान्मन्दस्मितं तु सा।।
        மயி பஸ்யதி ஸா பூமிம் பசியந்நம்ர முகீ ஸ்திதா |
        மாமாபஸ்யதி மாம் த்ருஷட்வா குர்யான் மந்தஸ்மிதம் து ஸா ||
மொழியாக்கம் எந்த வழுவுமின்றி சிறப்பாக உள்ளது.  யான் நோக்குங்காலை என்பதை மொழியாக்கம் செய்கையில் வடமொழி மரபுப்படி எழுவாயை ஸதி ஸப்தமியில் – அதாவது எழுவாயும் வினைத்தொடரும்  ஏழாம் வேற்றுமையில்  அமையும்படி - பயன்படுத்தியுள்ளார். நிலன் நோக்கி என்ற தொடரை மொழிபெயர்க்கையில் பூமௌ நம்ரமுகீ – பூமியில் குனிந்த முகத்துடன் – என அதிகப்படியாகச் சேர்த்திருப்பதிலும் தவறில்லை.
குறள் 

       கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள
       என்ன பயனும் இல.
ஸ்ரீராம

       लोके कामुकयोर्नेत्रे यदि प्रेम्णा परस्परम्।
         पश्येतां तर्हि वचसा भाषणे किं प्रयोजनम्।।
       லோகே காமுகயோர் நேத்ரே யதி பரேமணா பராஸ்பரம் |
       பபஸ்யேதாம் தர்ஹி வசஸா பாஷணே கிம் ப்ரயோஜனம்  ||

மூலம் இரத்தினச் சுருக்கமாக ஒரு கருத்தை மட்டும் கூறிச் செல்கையில்  மொழியாக்கம அதன் பின்புலத்தை விளக்கச் சென்று அழகைச் சிதைத்துவிடுகிறது – உலகில் காதலரின் கண்கள் அன்புடன் பரஸ்பரம் பார்த்துக் கொண்டால் வாய்ச்சொல்லால் என்ன பயன்?  என்ற இந்த மொழிமாற்றம் குறளின் கருத்திலிருந்து வெகு தூரம் விலகியுள்ளது.
மதிப்பீடு – முடிவுரை
திருக்குறளின் இரண்டு சமஸ்கிருத மொழியாக்கங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது கோவிநதராய் ஜெயின் செய்துள்ள முயற்சி வள்ளுவப் பெருந்தகையின் கருத்தை ஓரளவுக்கு நல்ல முறையில் முன் வைக்கிறது.
திருக்குறளை ஜெர்மானியத்தில் மொழிமாற்றம் செய்த கார்ல் கரவுல் இதனை ‘A GOLDEN APPLE IN A SILVER NETWORK’ என்று புகழ்கிறார். இந்தப் புகழுரையைத் தமிழில் ‘வெள்ளித் தட்டில் வைத்த தங்க மாம்பழம் என்று மொழிபெயர்க்கலாம். உண்மையில், திருக்குறளின் எந்த மொழியாக்கமும் அதன் அழகையும், பொருட்செறிவையும் கருத்தாழத்தையும் எட்ட முடியாது. ஒரு நல்ல மொழியாக்கத்தால் வள்ளுவத்தின் விழுமியத்தை மட்டுமே தக்க வைக்க  இயலும்.  

         ,*   *    *