Monday, 14 April 2014

சீதாபிராட்டியிடம் அனுமன் பேசிய மொழி

சீதாபிராட்டியிடம் அனுமன் பேசிய மொழி
                முனைவர் எச். பாலசுப்பிரமணியம்



வால்மீகி ராமாயணத்தின் ஆரண்ய காண்டம் மூன்றாவது சர்க்கத்தில் தான் ஆஞ்சனேயர் முதன்முதலாக ரங்கப் பிரவேசம் செய்கிறார். வாலிக்கு பயந்து ரிஷ்யமூக பர்வதத்தில் பதுங்கியிருக்கும் சுக்கிரீவன் மலையடிவாரத்தில் தேஜஸ்வியான இரு இளைஞர்கள் நடந்து வருவதைப் பார்த்து வாலி அனுப்பிய ஒற்றர்களோ இவர்கள் என்று சந்தேகப்பட்டு அமைச்சன் அனுமனை உண்மை தெரிந்துவர அனுப்புகிறான். துறவி வேஷம் தரித்த அனுமன் ராமலட்சுமணர்களைப் பார்த்து பவ்யமாக விசாரிக்கிறான்:   
“உங்களைப் பார்த்தால் விரதம் பூண்ட ராஜரிஷிகளைப் போல தெரிகிறீர்கள். எந்த தேசத்திலிருந்து வருகிறீர்கள்?  பொன்னிற மேனியில் மரவுரி தரித்து இருக்கிறீர்கள். ஆபரணங்கள்  அணிந்து அரசாள வேண்டிய நீங்கள் இந்தப் பகுதிக்கு எப்படி வந்தீர்களோ?  தாமரை போன்ற நயனங்கள், சிங்கம் போன்ற புயங்கள்.  ஏறு போன்றநடை. யதேச்சையாக் சந்திர சூரியர்கள் பூமியில் வந்து இறங்கினார்களோ? அல்லது தேவலோகத்திலிருந்து வந்தவர்களோ? மேருபர்வதமும் விந்தியமும் ஏழு கடல்களும் அடங்கிய பூமி அனைத்தையும்   ஆளக்கூடிய வலிமை உடையவர்களே நீங்கள் என்று கருதுகிறேன்.....
உவாச காமதோ வாக்யம் ம்ருது ஸத்ய பராக்ரமௌ
தேசம் கதமிமம் ப்ராப்தௌ பவந்தௌ வரவர்ணினௌ
பத்ம பதரேக்ஷனோ  வீரௌ ஜடா மண்டல தாரிணௌ
யத்ருச்சயேவ ஸம்ப்ராப்தௌ சந்தரஸூர்யௌ வஸுந்தராம்
விசால வக்ஷசௌ வீரௌ மானுஷௌ தேவ ருபிணௌ
உபௌ யோக்யாவஹம் மன்யே  ரக்ஷிதும் ப்ருதிவீமிமாம்
ஸஸாகரவனாம் கருத்ஸ்னாம் விந்தய்மேருவிபூஷிதாம் .
என்று தொடங்கி பதினெட்டு சுலோகங்களில் அந்தப் புதியவர்களைப் பற்றிய விசாரணை, சுக்கிரீவனின் சங்கட நிலைமை, இவர்களுடன் நட்புக் கொள்ளும் விருப்பம், பிறகு கடைசியாக தன்னைப் பற்றிய அறிமுகம் இவற்றை   அழகாக அமைக்கிறான்.  இதைக் கேட்ட ராகவேந்திரர் தம்பி இலட்சுமண ரிடம்  கூறுகிறார்:
நாந்ருக்வேத விநீதஸ்ய நாயஜுர்வேத தாரிண:
நாஸாமவேத விதுஷ: வாகயமேவம் விபாவிதும்
நூனம் வ்யாகரணம் க்ருத்ஸ்னம் அனேன பஹுதா ச்ருதம
பஹு வ்யாஹரதானேன ந கிஞ்சிதபசப்திதம   
     
“தம்பி! இவன் சாமான்யன் அல்லன்.  ரிக்வேதம் அறிந்த வினயசீலன், சாம வேத பண்டிதன், யஜுர்வேத வித்தகன்.  இல்லாவிட்டால் இத்தனை அழகாகப் பேச முடியாது.  இவன் நிச்சயமாக வியாகரணத்தை ஆதியோடந்தமாகப் பயின்றுள்ளான்.  இவன் இத்தனை நேரம் பேசியதில் சொற்குற்றம் பொருட்குற்றம் எதுவும் காணப்படவில்லை.  இத்தனை குணங்களுடன் பொருந்திய இவனை அமைச்சனாகப் பெறும் அரசனுடைய எல்லாக் காரியங்களும் வெற்றி அடையும என்பதில் சந்தேகமில்லை.
ராமச்சந்திரமூர்த்தியிடமிருந்து இத்தகு  சான்றிதழ் பெற்ற அனுமன் சுந்தர காண்டத்தின் நாயகனாகத் திகழ்கிறான். தென்திசை நோக்கி அனுப்பப்பட்ட வானரர்களில் அனுமன் ஒருவனே இலங்கையை அடைய முடிகிறது. 
சுந்தர காண்டம் முப்பதாவது  சர்க்கம். அசோகவனத்தில் சிம்சபா விருட்சத்தின் கிளையில் அமர்ந்தவாறு சீதா பிராட்டியைக் கண்டாயிற்று. சீதையும் விபீஷணன் மகள் திரிஜடையும் பேசியதையும் கேட்டாயிற்று.  அது எந்த மொழியோ, அனுமன் புரிந்துகொண்டான் பன்மொழி வித்தகனான அனுமன். பிறகு. ஒரு புதிய கவலை பற்றிக் கொண்டது.  கீழே இறங்கி பிராட்டியிடம் எந்த மொழியில் பேசுவது என்ற குழப்பம்.
யதி வாசம் ப்ரதாஸ்யாமி த்விஜாதிரிவ ஸம்ஸ்க்ருதாம்
ராவணம் மன்யமானா மே சீதா பீதா பவிஷ்யதி

அந்தணர்களைப் போல சம்ஸ்கிருத மொழியில் நான் பேசினால் என்னை ராவணன் என்று கருதி சீதை அஞ்சக் கூடும்.  அதனால் மானுடர்களைப போல அர்த்தமுள்ள வாக்கியமே பேச வேண்டும்
அவஸ்யமேவ வக்தவயம் மானுஷம் வாக்யமர்த்தவத்

நன்கு யோசித்தபின் அனுமன் இக்ஷ்வாகு  குல வீரரின் புகழை மதுரமான  சொற்களில் கேட்பிக்க நிச்சயித்தான்
இக்ஷ்வாகூணாம் வரிஷ்ட்ஸ்ய ராமஸ்ய விதிதாத்மன:
ஸுபானி தர்மயுக்தானி வசனானி ஸமர்ப்பயன்
ச்ராவயிஷ்யாமி ஸர்வாணி மதுராம் ப்ரப்ருவன் கிரம்
மரத்தின் பக்கமாக நின்று கொண்டு பிரியமான ராமபிரானின் கதையை மதுரமான் சொற்களால் பாடினான்
ஸம்ச்ரவே மதுரம் வாகயம் வைதேஹ்யா வ்யாஜஹார ஹ           

வைதேகி கேட்கும்படியான தூரத்தில் நின்று கொண்டு மதுரமான வாக்கியத்தில் ராமகதையைப் பாடினான். (சர்க்கம் 31)
ராஜா தசரதோ நாம ரத்குஞ்சர வாஜிமான்
புண்யசீலோ மகாகீர்த்தி: இக்ஷ்வாகூணாம் மஹாயசா:
தஸ்ய புத்ரோ ப்ரியோ ஜ்யேஷ்ட: தாராதிப நிபானன:
ராமோ நாம விசேஷஜ்ஞ: ச்ரேஷ்ட்: ஸ்ர்வதனுஷ்மதாம்
என்று தசரதரிடமிருந்து தொடங்கி தந்தை சொல் கேட்டு மனைவியுடனும் இளவலுடனும் ராமபிரான் வனம் புகுந்ததும், ஜனஸ்தானத்தில் ஜானகீ-ஹரணம் நிகழ்ந்ததும், சுக்கிரீவன் நட்பும், வாலி வதமும், சுக்கிரீவன் நாற்றிசையும் வானரர்களை அனுப்பியதும் தான் மட்டுமே அங்கு வந்து சேர்ந்ததுமான விருத்தாந்தத்தை பதினான்கு சுலோகங்களில் அடக்கி விடுகிறான் சொல்லின் செல்வன்.
வடமொழியில் பேசவில்லை என்பது உறுதி.  அந்தண மொழியில் பேசினால் தன்னை ராவணன் எனக் கருதி சீதை அஞ்சக் கூடும் என்று சமஸ்கிருதத்தை தவிர்த்தாயிற்று.   மதுரம் வாக்கியம், மானுஷம் வாக்கியம் என்று கூறினாரே தவிர எந்த பாஷை என்று சொல்லவில்லை. அனுமன் ஒரு வாக்கியமா கூறினான்? வாக்கியங்கள் என்று சொல்லாமல் ஏகவசனத்தில் வால்மீகி  குறித்திருப்பது வாக்கியத்தொகுப்பான தமிழ் தான் என்று மதுரை ‘செந்தமிழ் பத்திரிகையின் (மே-ஜூன் 1939) ஆசிரியர் கூறுகிறார்.  அதற்கான ஆதாரங்களையும் அடுக்குகிறார்.
1.        அந்தக் காலத்தில் பாரத கண்டத்தில் முக்கியமாக இரண்டு மொழிகள் தான் பழக்கத்தில் இருந்தன – தென்னாட்டில் தமிழ். வடக்கே வடமொழி.  வடமொழியை  வடதமிழ் என்றும் வழங்கினார்கள்.  காரணம், தமிழ் என்ற சொல்லுக்கு மொழி என்றும் பெயர் உண்டு.
2.       அகத்தியர் தென்னாடு வந்து தமிழுக்கு இலக்கணம் வகுத்தார்.  திருமூ லரும் வடநாட்டிலிருந்து வந்த சுந்தர நாதர் தான்.  படித்தவர்களும்  அரச குலத்தவர்களும் இரண்டு மொழிகளிலும் பரிச்சயம் உள்ளவர்கள்.
3.       மிதிலை, அயோத்தி போன்ற நாடுகளில் ராஜதந்திரத்துக்கான ரகசிய மொழியாக தமிழ் இருந்ததால் மிதிலை ராஜகுமாரியான சீதைக்குத் தமிழ் தெரிய வாய்ப்பு உண்டு.
4.       பிறகு மானுஷம் வாசம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் வால்மீகி.  பண்டித மொழி, சாஸ்திர மொழி சமஸ்கிருதமாக இருந்ததால் சாமான்ய மானுடர்களின் மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும்.
5.       இராமாயண காலத்தில் தமிழ்ர்களின் குழுக்கள் வடநாட்டிலும் வாழ்ந்தன.  ஒரு சமயத்தில் கங்கை யமுனைப் பிரதேசங்களில் திராவிடர்களே இருந்தார்கள். சிந்துவெளி நாகரீகம் தமிழ்ப் பண்பாடு சார்ந்தது. ரிக்வேதத்தில் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் சொற்களை மகரிஷி அரவிந்தர் கண்டுபிடித்துள்ளார்.
6.       வால்மீகி மதுரம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.  மதுரம் எப்படி தமிழ் என பொருள் தரும்?  இதற்கு நாராயண ஐயங்கார் விடை கூறுகிறார் – இனிது என்பதும் தமிழ் என்பதும் ஒருபொருளுடையவாம். ‘தமிழ் என்பது இனிமை நீர்மை என்கிறது நிகண்டு.  ‘வண்டு தமிழ்ப் பாட்டிசைக்கும் தாமரையே என்பது கம்பன் வாக்கு.  இனிய கீதம் என்பதைத் தமிழ்ப்பாட்டு என்கிறார்.   நீலக்கல்லை ‘நீலம் என்று கூறுவது போல மதுரம் வாக்கியம் என்றாலே இனிமையான மொழி அதாவது தமிழ் என்று பொருள்படும். மதுரம் என்ற  விசேஷணமானது,  தான் விசேஷிப்பிக்கும் பெயர்ச்சொல்லான் தமிழுக்குப் பதிலாக வந்தது.
7.       வடமொழி போல பருஷ (கடினமான  ख, ठ, फ    போன்ற) அட்சரங்கள் இல்லாத மொழி தமிழ்.  எனவே தான் வால்மீகி மதுரம் என்ற சொல்லால் தமிழைக் குறிக்கிறார். இனிமையா ஓசையுடைய மொழி.
8.       இன்னும் ஒரு விஷயம்  சூழ்ந்திருக்கும் அரக்கிகளுக்குத் தெரியாத மொழியில் பேச வேண்டும் என்ற கட்டாயமும் இருந்திருக்கும்.
9.       மேலும், தொலைவான அந்த தேசத்தில் தன் நாட்டில் பழகும் மொழியில் அனுமனின் இனிமையான வார்த்தைகளைக் கேட்டு சீதை மகிழ்ந்து கூறுகிறாள் –

கல்யாணீ பத் காதேயம் லௌகிகீ ப்ரதிபாதி மே

(நன்மை பயக்கும் உன் சொற்களைக் கேட்கும்போது சொந்த ஊரில் மக்கள் பேசுவதைக் கேட்பது போன்ற இன்பம் ஏற்படுகிறது.)
ஆக, மதுரம் என்ற விசேஷண சப்தத்தால் வால்மீகி  முக்கியார்த்தமான மொழியின் பெயரைக் குறிப்பால் உணர்த்தினார் என்று முடிக்கிறார் ஆசிரியர். 
கடைசியாக அனுமன் பன்மொழி வித்தகன் என்பதில் ஐயமில்லை.  நவ வியாகரண பண்டிதர் ஒரு மொழி இலக்கணம் கற்றவர் என்பதல்ல பொருள். பண்டையக் கணக்குப் படி பண்டிதர் என்றால் பதினெட்டு மொழிகள் தெரிந்திருக்க வேண்டும்.  அனுமனோ மகாபண்டிதன்.  தண்டகாரண்யம் எனப்படும் மகாராஷ்டிரத்திற்கும் நீகிரிக்கும் இடைப்பட்ட கிஷ்கிந்தை மொழியுடன் பரவலா வழங்கிய தமிழ் மற்றும் வடமொழி அறிந்தவன்.  இலங்கையில் இலக்குவன் இந்திரஜித்தின் பாணத்தினால் மூர்ச்சை அடைந்ததும் அந்த இரவிலேயே இலங்கையில் வைத்தியன் சுஷேணரை அழைத்து வருவதற்கு ராட்சத மொழி தெரிந்திருக்க வேண்டும்.  அதோடு ராவணன் தன சைனிய மொழியாக தெலுங்கைப் பயன்படுத்தினானாம் . எதிரி சைனியத்தில் ஊடுருவக் கூடிய அனுமனுக்குத் தெரியாத மொழியல்ல அது   மட்டுமல்ல, யாரிடம் எப்படிப் பேச வேண்டும் என்பது  அனுமனிடமிருந்து கற்க வேண்டிய கலை. சொல்லின் செல்வன் என்பது அனுமனையே குறிக்கும். இனி இப்படியும் சொல்லலாம்...


அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று பெற்ற 
அணங்கை கண்டு அயலூரில்
அமுத த் தமிழில் பேசி
அனைத்தையும் சொன்னான்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
அவன் அளித்து காப்பான்.
  
               ,*  *  *   .     

No comments:

Post a Comment